செய்திகள்

கடைசி மெக்டொனால்ட் பர்கர்: 10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி?

2009ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்போது ஒருவர் கடைசியாக பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் வாங்க முடிவு செய்தார்.

“மெக்டொனால்டில் வாங்கும் உணவு கெட்டுப்போகாது என்று கேள்விபட்டேன். அது உண்மையா என்பதை பார்க்கவே இதை வாங்கி வைத்தேன்” என ஏஃப்பியிடம் கூறினார் ஜோர்துர் மராசான்.

இந்த வாரத்தோடு இந்த உணவு வாங்கி 10 வருடம் ஆகிறது. ஆனால் இந்த உணவு வாங்கி ஒருநாள் ஆனது போலவே தோன்றுகிறது.

இப்போது தெற்கு ஐஸ்லாந்தில் இருக்கும் ஸ்னொத்ரா எனும் விடுதியில் கண்ணாடி பெட்டியில் உள்ள இந்த பர்கரை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.

“அந்த உணவு இங்கு தான் இருக்கிறது. நன்றாகவே உள்ளது” என அந்த விடுதியின் உரிமையாளர் சிக்கி சிகர்துர் பிபிசியிடம் கூறினார்.

மேலும், “இது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதை சிந்திக்க வேண்டும். இது கெட்டுப்போகவில்லை. அதை சுற்றியுள்ள பேப்பர் மட்டுமே பழையதுபோல் இருக்கும்” என்கிறார் அவர்.

தினமும் இந்த பழைய பர்கரை பார்க்க உலகம் முழுவதில் இருந்தும் அதிகம் பேர் வருகிறார்கள் என்று கூறும் சிக்கி, 4 லட்சம் பேர் தினமும் இணையதளம் வழியாக இதை பார்ப்பதாக தெரிவித்தார்.

பார்வையாளர்களை கவர்ந்த உணவு பண்டம்
படத்தின் காப்புரிமை AFP / ANGELIKA OSIEWALSKA பார்வையாளர்களை கவர்ந்த உணவு பண்டம்

இந்த 10 வருடத்தில், பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் நிறைய இடங்களில் இருந்துள்ளது.

ஆரம்பக் கட்டத்தில் இந்த பர்கர் ஸ்மராசன் என்பவருடைய வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு ப்ளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. எவ்வளவு நாட்கள் இந்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதை ஆராயவே அது அங்கு வைக்கப்பட்டிருந்தது.

மூன்று வருடம் கழித்து அதில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டு, அதை அவர் ஐஸ்லாந்து தேசிய அருங்காட்சியகத்திற்கு கொடுத்துள்ளார்.

ஆனால் அருங்காட்சியகத்தின் நிபுணர் அந்த உணவை பாதுகாக்க தங்களிடம் போதிய உபகரணங்கள் இல்லாததால் மீண்டும் அதை உரிமையாளரிடம் திருப்பி தந்துள்ளார் என ஸ்னொத்ரா ஹவுஸில் இருப்பவர்கள் கூறுகின்றனர்.

“அவர் தவறாக புரிந்து கொண்டார் என நினைக்கிறேன். அந்த பர்கரை பதப்படுத்தத் தேவையே இருந்திருக்காது” என்று கூறுகிறார் ஸ்மராசன்.

ஐஸ்லாந்து தலைநகர் ரேக்யவிக்கில் உள்ள ஒரு விடுதியில் சில நாட்கள் இருந்த இந்த பர்கர், அங்கிருந்து தற்போது இருக்கக் கூடிய ஸ்னோத்ரா ஹவுஸில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பதிவான பிறகு இது போன்று காலம் கடந்தும் கெட்டுப் போகாமல் இருக்கும் உணவுகள் குறித்து விவாதம் எழுந்தது.

ஸ்மராசன், மெக்டொனால்ட் உணவின் மீது பரிசோதனை செய்து பார்த்த முதல் மனிதர் இல்லை

பர்கர் வைத்துள்ள ஸ்னொத்ரா ஹவுஸ்படத்தின் காப்புரிமை SNOTRA HOSTEL பர்கர் வைத்துள்ள ஸ்னொத்ரா ஹவுஸ்

பிரபல சமூக ஆர்வலர் காரென் ஹன்ரெஹன் 1996ல் ஒரு பர்கரை வாங்கி அதை 14 ஆண்டுகள் வைத்திருந்து பார்த்தபோது எந்த மாற்றமும் இல்லை என கூறியிருந்தார்.

இதேபோல் 2010ல் நியூயார்க்கைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சேலி டேவிஸ் மெக்டொனால்டிலிருந்து உணவை வாங்கி, அதை தினமும் ஆறு மாதத்திற்கு தினமும் புகைப்படம் எடுத்தார்.

அது கெட்டு போனதற்கான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. துர்நாற்றம் கூட வீசவில்லை என கூறியிருந்தார்.

இதைப் பற்றி 2013ல் மெக்டொனால்ட் கூறியபோது, சரியான தட்பவெட்ப சூழலில் எங்கள் உணவும், மற்ற உணவுகளை போல கெட்டுப்போகும். ஆனால் காற்றில் ஈரப்பதம் இல்லாத போது எங்கள் உணவு கெட்டுப்போகாது என்று தெரிவித்திருந்தது.

ஐஸ்லாந்து பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர், இந்த விளக்கத்தை உறுதிபடுத்தினார். ஈரப்பதம் இல்லை என்றால் உணவு காய்ந்துவிடும் என ஏஃப்பியிடம் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

முதலாவது வீடு வாங்குவதற்கான அரச உதவியும் நிபந்தனைகளும்!

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?

காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button