செய்திகள்

உலகளாவிய ரீதியில் முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு : தேவையறிந்து உபயோகியுங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம்

உலகலாவிய ரீதியில் தற்போது முகக்கவசங்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே அதனை அநாவசியமாகப் பயனபடுத்துவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரிவு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவ சேவையாளர்கள் ஊடாக சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

நாங்கள் தேசிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுத்தடுப்புப் பிரிவில் பணியாற்றுகின்றோம். இத்தொற்று பரவுவதைக்  கட்டுப்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.

முதலாவதாக அத்தியாவசியமான தேவைகள் தவிர்த்து, ஏனைய சந்தர்ப்பங்களில் வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பெரும் எண்ணிக்கையானோர் ஒன்றுகூடும் போது வைரஸ் தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அடுத்ததாக உலகளாவிய ரீதியில் தற்போது முகக்கவசங்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களைக் கையாளும் சுகாதார சேவையாளர்களாகிய நாங்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

எனவே அதற்கான தட்டுப்பாடொன்று நிலவும் சூழ்நிலையில் அதனை அநாவசியமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் நீங்கள் அண்மையில் வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டிருந்திருப்பின் தயவுசெய்து உங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏதேனும் காணப்படும் பட்சத்தில் மருத்துவ உதவிகளை நாடுங்கள். ஆனால் அப்போது நீங்கள் வெளிநாடு சென்றுவந்த விடயத்தை மருத்துவரிடம் நிச்சயமாகக் கூறுங்கள்.

Back to top button