செய்திகள்

முதல் மருத்துவ பரிசோதனையில் தோல்வியடைந்த கொரோனா மருந்து?

கொரோனா சிகிச்சையில் சிறப்பாக செயல்படக்கூடும் என கருதப்பட்ட ஆண்டி வைரல் மருந்து, தனது முதல் சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது.

ரெம்டிசிவிர் என்னும் அந்த மருந்து கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ஆவணம் ஒன்றின் மூலம் ரெம்டிசிவிர் என்னும் மருந்தை கொண்டு நடத்தப்பட்ட சோதனை தோல்வியில் முடிந்தது தெரிய வந்துள்ளது.

இந்த மருந்து நோயாளிகளின் நிலையை சரி செய்யவும் இல்லை, அவர்கள் ரத்த மாதிரியில் இருந்த நோய்கிருமிகளை குறைக்கவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்தின் கண்டுபிடிப்புக்கு பின்னணியில் இருந்த கிலெட் சைன்ஸ் என்னும் அமெரிக்க மருந்து நிறுவனம், அந்த ஆவணம் ஆராய்ச்சியை தவறாக காட்டிவிட்டதாக தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சி குறித்த தகவல்கள்

தோல்வியடைந்த இந்த சோதனை பற்றிய தகவல், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ பரிசோதனைகள் குறித்த தரவுத்தளத்தில் பதிவேற்றிய பிறகு வெளிவரத் தொடங்கியது. பின்னர் அது நீக்கப்பட்டது. அந்த ஆவணம் தவறுதலாக பதிவேற்றப்பட்டது எனவும் உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

237 நோயாளிகளில் 158 பேருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டது. 79 பேருக்கு இந்த மருந்தை போன்றதொரு மாதிரி அளிக்கப்பட்டது இருதரப்பினரையும் ஆராய்ச்சியாளர்கள் கண்கானித்து வந்தனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கு பிறகு ரெம்டிசிவிர் மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளில் 13.9 விழுக்காட்டினர் மரணத்தை தழுவினர். ஆனால் மருந்தின் மாதிரி செலுத்தப்பட்டவர்களில் 12.8 விழுக்காட்டினர் மரணித்தனர். மேலும் பக்க விளைவுகள் காரணமாக இந்த சோதனை நிறுத்தப்பட்டது.

“ரெம்டிசிவிர் மருத்துவம் அல்லது வைரஸ் ரீதியான பலன்களோடு தொடர்புடையவை அல்ல என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.” என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது மருந்தை உருவாக்கிய நிறுவனம்?

உலக சுகாதார நிறுவனத்துடன் இது குறித்து கிலெட் நிறுவனம் வாதிட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த பதிவு தங்களின் ஆராய்ச்சியை தவறாக சித்தரித்துவிட்டது என கிலெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். “இந்த சோதனையில் அதிகம் பேர் கலந்துகொள்ளவில்லை என்பதால் அது முன்னதாகவே நிறுத்தப்பட்டது எனவே அது புள்ளியியல் ரீதியாக அர்த்தமுள்ளதாக இருக்காது,” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அந்த ஆய்வு முடிவை எட்டவில்லை என்றாலும், தரவுகளை வைத்து பார்க்கும்போது ரெம்டிசிவிர் மருந்து பலனை அளித்துள்ளது என்றே தெரிகிறது. குறிப்பாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு, ஆரம்பக் காலத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது பலனளித்துள்ளது.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Back to top button