செய்திகள்

முதலாம் திகதி முதல் பஸ்ஸில் பயணிப்பவர்கள் தொந்தரவின்றி பயணிக்கலாம்!!

தனியார் பஸ்களில், பயணிகள் அசௌரியங்களுக்குள்ளாகும் வகையில் அதிக சப்தத்துடன் பாடல்களை ஒலிப்பரப்புவதற்கும், காணொளிகளை ஔிப்பரப்புவதற்கும் தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இதனை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து முறைபாடுகளை பதிவு செய்வதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, பயணிகள் தமது முறைபாடுகளை முன்வைக்க முடியும்.

பொதுமக்களின் முறைபாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, தனியார் பஸ்கள் அல்லது இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், மந்த கதியில் பயணிக்குமாயின் அது தொடர்பிலும் பயணிகள் முறைபாடுகளை முன்வைக்க முடியும்.

பஸ் சாரதிகள் கவனயீனமாக அல்லது சட்டவிரோதமாக பயணிப்பாராயின், அல்லது பஸ் நடத்துனர்கள் பயணிகள் அசௌகரியங்களுக்குள்ளாகும் வகையில் செயற்படும் பட்சத்தில் அது குறித்தும் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து பஸ்களிலும் ஒலிப்பரப்புவதற்கு ஏற்ற வகையில் ஆயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனை பஸ் சாரதிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளைய தினம் மாக்கும்புர பஹுவிட போக்குவரத்து மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் அந்த பாடல்களை மாத்திரம் ஔிப்பரப்ப முடியும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button