செய்திகள்

1,330 திருக்குறளையும் “மிரர் ரைட்டிங்” முறையில் எழுதி கல்லூரி மாணவி சாதனை..!

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி ஒருவர், 1,330 திருக்குறளையும் ‘மிரர் ரைட்டிங்’ முறையில் எழுதி புத்தகமாக வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

1,330 திருக்குறளையும் “மிரர் ரைட்டிங்” முறையில் எழுதி கல்லூரி மாணவி சாதனை..! 1

தமிழகத்தின் திருவண்ணாமலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர், திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலை இரண்டாம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் பயின்று வருகிறார்.

சிறுவயது முதலே தமிழ் மீதும், திருக்குறள் மீதும் தீராத பற்று கொண்ட நந்தினி, பல்வேறு பேச்சு மற்றும் கவிதை உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், தமிழ் இலக்கிய விழாக்களில் பங்கேற்று ‘திருக்குறள் தொண்டாளர்’, ‘திருக்குறள் தூதர்’ ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.

அத்துடன், ‘மிரர் ரைட்டிங்’ முறையில் எழுதுவதிலும் கைதேர்ந்தவராக விளங்குகிறார். காகிதத்தின்  வலதுபுறத்திலிருந்து தலைகீழாக எழுதியபின், அதை முகம் பார்க்கும் கண்ணாடி மூலம் பார்த்தால் சரியாக தெரிவதுதான் மிரர் ரைட்டிங்.

கடின பயிற்சியாலும், விடா முயற்சியாலும் 1,330 குறளையும் மிரர் ரைட்டிங் முறையில் எழுதி, அதை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். புதுச்சேரி தமிழ்ச் சங்கமும் புதுச்சேரி அரசும் இணைந்து இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

யுனிவர்சல் புக் ஒஃப் அச்சீவர்ஸ், பியூச்சர்ஸ் கலாம் புக் ஒஃப் அச்சீவர்ஸ், ஜெட்லீ புக் ஒஃப் ரெக்கார்ட் போன்ற நிறுவனங்கள் மாணவி நந்தினிக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளன.

அடுத்த கட்டமாக, 1,330 திருக்குறளையும் நான்கு திசைகளிலும் எழுத பயிற்சி செய்து வருவதாக கூறுகிறார் சாதனை மாணவி நந்தினி

Back to top button