செய்திகள்

இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை! வெற்றியளிக்குமா…. இல்லை பேரழிவில் சிக்குமா?

வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று” மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று திருக்குறளில் மழையின் பெருமையை திருவள்ளுவர் கூறியுள்ளார்.
மழை பெய்யப் போவதை துல்லியமாக யாரும் கணித்துக் கூற இயலாது. இயற்கையாக எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் என்பதை, ‘‘மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குக்கூடத் தெரியாது’’ என்ற பழமொழியில் எம் மூதாதையர் எடுத்துரைத்துள்ளனர்.
அப்படி பெருமை கொண்ட இயற்கை மழை பல நாடுகளில் செயற்கையில் வெற்றிகரமாக பெய்விக்கப்படுகிறது. அதை எண்ணி ஆச்சரியப்படத்தேவையில்லை. ஏனெனில் அந்த அளவு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது.
இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை! வெற்றியளிக்குமா.... இல்லை பேரழிவில் சிக்குமா? 1
என்னதான் நாகரீக உச்சத்தில் மானுடம் இருந்தாலும் இயற்கையின் அற்புதங்களை மாற்றி அமைக்க முடியாது. அப்படி மாற்றி அமைக்கும் முயற்சிகள் ஏதோ ஒரு விதத்தில் எம்மை நோக்கிய ஆபத்துக்களாகவே இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தற்போது செயற்கை மழை நீரை இலங்கைக்கு கொண்டு வரும் முயற்சி மிக தீவிரமாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இதன் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.
ஓர் இடத்தில் பெய்யவேண்டிய மழையை செயற்கை முறையில் இன்னோர் இடத்தில் பெய்விப்பதே செயற்கை மழை எனப்படுகிறது.
செயற்கை மழை என்பது மேகங்களின் மீது வெளிப்புறத் துகள்களைத் தூவி மழையை பொழிய வைப்பது ஆகும். இச்செயற்பாடானது மேகவிதைப்பு என்றழைக்கப்படுகிறது.
செயற்கை மழையின் வரலாறு பின்னணி
செயற்கை மழைக்கான தேவை தொடர்பான எண்ணக்கரு 1903ஆம் ஆண்டளவிலேயே விஞ்ஞானிகளிடையே விதைக்கப்பட்டது.
எனினும் எந்த விதமான முன்னேற்றங்களும் சாத்தியப்படவில்லை. 1950 களில் அவுஸ்திரேலியாவில் ” மழை உருவாக்கம்” என்ற பெயருடன் ஒரு குழு நியமிக்கப்பட்டு தீவிர தேடலில் இறங்கியது. விளைவாக 1957 ஆம் ஆண்டளவில் செயற்கை மழை தொடர்பான ஒரு திடமான எண்ணக்கரு உருவானது.
தொடர்ச்சியாக 1960 ஆம் ஆண்டில் முதலாவது செயற்கை மழை பெய்விக்கப்பட்டது. இந்த திட்டத்தில் அமெரிக்கா மற்றும் கனடா விஞ்ஞானிகள் தீவிரமாக செயற்பட்டார்கள்.
முக்கியமாக ஸ்ஷேபர் மற்றும் அவருடன் பணியாற்றிய பெர்னார்டு வென்னிகாட் ஆகிய விஞ்ஞானிகள் இத்திட்டத்தின் அடிப்படை காரணிகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றனர்.
பின்னர் வந்த அமெரிக்க விஞ்ஞானி சிம்சன் உறுதியான பல மாற்றங்களை செய்தார். நவீன மாறுதல்களை சீன நிபுணர் சாங் சியாங் குழுவினர் செய்தார்கள். இயற்கை மழையானது பெய்யாது இருக்கும்போது செயற்கை மழை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
செயற்கை மழை உருவாகும் விதம்
செயற்கை மழை உருவாக்கத்தில் மூன்று நிலைகள் உள்ளன.
  1. காற்றழுத்தத்தை உருவாக்குதல்
  2. மழை மேகங்களை திரட்டுதல்
  3. மழை மேகங்களை குளிரச் செய்தல்
முதலில், வானில் நகர்ந்துகொண்டிருக்கும் மேகங்களை மழை தேவைப்படும் இடத்திற்கு ஒன்றுகூட்ட வேண்டும். அதற்கு அந்த பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்க வேண்டும்.
கல்சியம் கார்பைட், கல்சியம் ஒக்ஸைட், உப்பும் யூரியாவும் சேர்ந்த கலவை, அமோனியம் நைட்ரேட் கலவையை விமானங்கள் மூலம் அந்த பகுதியில் இருக்கும் மேகங்களின் மேல் தூவி அப்பகுதியில் காற்றழுத்தத்தை உருவாக்குவதன் மூலம் ஈரத்தன்மையை அதிகரித்து மழை மேகங்கள் உருவாக்குவார்கள்.
மழை மேகங்களின் கணத்தை அதிகரிக்க சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட், உலர் பனி ஆகியவற்றை தூவி மேலும் அதிக அளவிலான மழை மேகங்களை ஒன்றுகூட்டுவார்கள். (கல்சியம் குளோரைட்டும் பயன்படுத்துவதுண்டு.) இது விமானம் மூலம் அல்லது பீரங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
இறுதியில் வெள்ளி அயோடைடு மற்றும் உலர் பனி ஆகியவற்றை மேகங்களில் தூவுவதன் மூலம் மேகங்கள் குளிச்சியாக்கப்படுகின்றன. குளிர்ந்த மேகங்களில் இருந்து நீர்த்துளி வெளியேறி செயற்கை மழை பெய்கிறது.
செயற்கை மழையின் பாதிப்பு
இப்படி பெய்யும் மழை ஆராய்ச்சியாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பின்னணியில் பாரிய ஆபத்தினையும் ஏற்படுத்துகின்றது.

“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது”


என்று மழையின் சிறப்பை திருவள்ளுவர் திருக்குறளில் அழகாக கூறியுள்ளார்.

அதாவது மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும் என்கிறார். அந்த கருத்துக்கு இணையாக மாற்று கருத்து கிடையாது, ஆனால் செயற்கையாக பெய்யும் மழைத் துளியில் பல உயிரின் உதிர துளிகள் மறைமுகமாக உறிஞ்சி எடுக்கப்படும் என்பது உண்மை.
செயற்கை மழைத்துளியில் மழையைப்போன்றதாகவே இருக்கும். துளிகளின் அளவும் சில வேளைகளில் பெரியதாக இருக்கலாம்.
ஆனால், ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக மேகங்களை கூட்டி மழையை பெய்விப்பதால் பல இடங்களில் இயற்கையாக பெய்யவேண்டிய மழை பெய்யாது வறட்சி ஏற்படும். காலநிலை மேலும் மோசமடையும். செயற்கையாக மழை பெய்விக்க தேவையான அனைத்தையும் செய்தும் சில நேரங்களில் மழை பெய்வதில்லை. சில நேரங்களில் எதிர் பார்த்ததை விட அதிகமாக மழை பெய்து அழிவை ஏற்படுத்தும்.
உதாரணமாக செயற்கை மழை பரிசோதனையில் கனடாவின் கியூபக் நகரில் மூன்று மாதங்களில் சுமார் 60 நாட்கள் மழை பெய்து பாரிய அழிவை ஏற்படுத்தியது.
இப்படி ஒரு நிலைமை இலங்கையில் ஏற்பட்டால் யுத்தத்தில் இழந்த எமது உறவுகளை போலவே மீண்டும் எம் இனம் பாரிய அளவு அழிந்து விடும்.
மழை அதிகமாக பெய்து ஆபத்தை ஏற்படுத்தி விட்டால் இயற்கையாக பொழியும் மழை நீர் கூட பல மாதங்களுக்கு மேல் பெய்யாமல் பாரிய வரட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதேவேளை, இலங்கையில் 1980ஆம் ஆண்டு காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்க பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைக்கும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதனால் பல நன்மைகள் கிடைத்திருந்தது. இம் முறை ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் வெற்றியை ஏற்படுத்தினால் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கைக்கு செயற்கை மழையை வழங்க தாய்லாந்து நாட்டு ஆய்வுக் குழு முதன் முறை வருகை தந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை! வெற்றியளிக்குமா.... இல்லை பேரழிவில் சிக்குமா? 2

இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை! வெற்றியளிக்குமா.... இல்லை பேரழிவில் சிக்குமா? 3

இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை! வெற்றியளிக்குமா.... இல்லை பேரழிவில் சிக்குமா? 4

இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை! வெற்றியளிக்குமா.... இல்லை பேரழிவில் சிக்குமா? 5

Thank you tamilwin

Back to top button