செய்திகள்

உணவாக மாறிய டைட்டானிக் கப்பல்! ஆழ்கடலில் ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடலில் உள்ள உப்பு மற்றும் உலோகம் தின்னும் பாக்டீரியாக்களால் மிக விரைவாக இந்த டைட்டானிக் கப்பல் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 10 ஆம் திகதி, 1912 ஆம் ஆண்டு டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தைத் துவங்கியது.

இந்தப் பயணத்தின் போது எதிர்பாராதவிதமாக டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதி அட்லாண்டிக் ஆழ்கடலில் சுமார் 2,224 பயணிகளுடன் மூழ்கியது.

இந்த விபத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

யாராலும் இந்த சம்பவத்தை மறந்திருக்க முடியாது, அதேபோல் யாராலும் டைட்டானிக் கப்பலையும் மறந்திருக்க முடியாது. தற்போது இந்த டைட்டானிக் கப்பல் கடலில் வெகு வேகமாக அழிந்து வருகிறது.

14 வருடங்களுக்கு முன்னால் அட்லாண்டிக் ஆழ்கடலுக்குச் சென்று, டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதே ஆழ்கடல் டைவர் குழு, மீண்டும் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்து சோதிப்பதற்காக இந்த மாதம் சென்றபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் ஐந்து முறை சோதனை செய்துள்ளது.

இந்த சோதனையின் போது டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக உப்பினாலும், உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களாலும் கடலில் உள்ள அழுத்தத்தினாலும் டைட்டானிக் கப்பல் மிக வேகமாக அழிந்து வருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது.

டைட்டானிக் கப்பலில் அழிந்துவரும் இடங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது கப்பலின் கேப்டன் இருந்த கேப்டன் அறைதான். இதற்கு முன்பு வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கேப்டனின் பாத் டப் தற்பொழுது காணாமல் போய்விட்டது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்கள் அதைத் தின்று அழித்துவிட்டது.

இந்த உலோகம் தின்னும் பாக்டீரியாக்கள் இயற்கையானது தான் என்று விஞ்ஞானி லோரி ஜான் தெரிவித்துள்ளார். ஆனால் டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக அழிந்து வருவதற்கு இந்த பாக்டீரியாக்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதே முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆழ் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இன்னும் சில காலங்களில் இல்லாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் நம் நெஞ்சங்களில் டைட்டானிக் கப்பல் மற்றும் அதன் காதல் கதை என்றும் நிலைத்திருக்கும் என்று சந்தேகமில்லாமல் கூறிக்கொள்ளலாம்.

Back to top button