ஆன்மிகம்

காயத்ரி மந்திர மகிமை (Interesting Story Of Gayathri Manthras)

முற்காலத்தில் நெல்லையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த பாண்டிய மன்னன் ஒருவன், தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டான். வைத்தியர்கள் பலர் முயற்சி செய்தும் குணப்படுத்த முடியவில்லை.

ஒருநாள் மன்னனைச் சந்தித்த ஜோதிடன் ஒருவன், “தங்களுக்கு மருந்து தேவையில்லை. பரிகாரம் செய்தாலே போதும்!” என்றான். அதன்படி வேள்வி தொடங்கியது. உரிய மந்திர உச்சாடனங்களுடன் யமதர்மனின் உருவில் பொம்மை ஒன்றைச் செய்த ஜோதிடன், அதன் கையில் கத்தி ஒன்றையும் செருகி வைத்தான்.

பிறகு, “மன்னா, பொம்மையின் கையில் உள்ள கத்தியைக் கீழே விழ வைப்பவர்கள், இந்த நகை மற்றும் தங்க நாணயங்களைப் பரிசாக எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவியுங்கள்!” என்றான் ஜோதிடன்.

நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் அரண்மனைக்கு வந்தனர். ஆனால், ஒவ்வொருவரும் அந்த பொம்மையை நெருங்கும் வேளையில்… அது, மூன்று விரல்களை உயர்த்திக் காட்டும். வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் ஓடிவிடுவார்கள்.

 

இந்த நிலையில், அந்தணர் ஒருவர் தானும் முயற்சி செய்து பார்க்கலாமே என்று எண்ணி அந்த மந்திர பொம்மையை நெருங்கினார். வழக்கம்போல மூன்று விரல்களை உயர்த்திக்காட்டியது பொம்மை. அந்தணர், ஏதோ புரிந்தவராக, ‘முடியாது!’ என்றார். உடனே பொம்மை, இரு விரல்களை மட்டும் காட்டியது. இப்போதும் ‘முடியாது’ என்றார் அந்தணர். அதன் பின்னர் ஒற்றை விரலை மட்டும் பொம்மை உயர்த்திக்காட்ட, ‘சரி’ என்றார் அந்தணர். அத்துடன், அருகில் பாத்திரத்தில் இருந்த நீரைக் கையில் ஏந்தி, தாரை வார்த்தும் கொடுத்தார். மறுகணம், கையில் இருந்த கத்தியைக் கீழே போட்டது பொம்மை. அப்போதே மன்னனின் வயிற்று வலியும் குணமானது.

பிறகு, மந்திர பொம்மையின் மூன்று விரல் ரகசியத்தையும் அந்தணர் பதில் கூறியதன் விளக்கத்தையும் கேட்டான் மன்னன்.

“மன்னா… மந்திர பொம்மை மூன்று விரலை உயர்த்திக்காட்டியதும், தினமும் மூன்று வேளை காயத்ரி மந்திரம் ஜபிப்பதால் கிடைக்கும் பலனைத் தானமாகக் கேட்பதாகக் கருதி, ‘முடியாது’ என்று மறுத்தேன். பிறகு, இரு விரல்களை மட்டும் காட்டியது பொம்மை. அப்போது, ‘இரு வேளைகள் காயத்ரி மந்திரம் ஜபித்த பலனை கொடு!’ என்று எண்ணினேன். அதற்கும் மறுத்து விட்டேன்.

இறுதியில், ஒற்றை விரலை சுட்டிக்காட்டியது பொம்மை. உடனே, ‘ஒரு வேளை ஜபித்த பலனைத்தானே கேட்கிறது… கொடுக்கலாம்!’ என்று பலனை தாரை வார்த்தேன். பொம்மையும் கத்தியை கீழே போட்டு விட்டது!” என்றார். இதைக் கேட்ட மன்னன், காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்து அவருக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தான்.

 

Back to top button