செய்திகள்

சென்னைக்கு வந்த சீனக் கப்பலில் இரண்டு பேருக்கு கொரோனோவா?

சென்னைக்கு வந்த சீனாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பணியாளர்கள் இருவருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அந்தக் கப்பலைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு கொரோனோ இல்லையெனத் தெரியவந்துள்ளது.

எம்.வி. மேக்னட் என்ற சரக்குக் கப்பல் பிப்ரவரி 16ஆம் தேதிவாக்கில் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அந்தக் கப்பல் சீனாவிலிருந்து புறப்பட்டு 14 நாட்கள் ஆகிவிட்டன என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, பிப்ரவரி 18ஆம் தேதியன்று சென்னைத் துறைமுகத்திற்குள் வர அனுமதியளிக்கப்பட்டது.

கப்பல் வந்து நின்ற பிறகு, அதிலிருந்த பணியாளர்களை துறைமுகத்தின் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் இருவருக்கு லேசான காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், மூச்சுத் திணறலோ, வேறு பிரச்சனைகளோ அவர்களுக்கு இல்லை. இதையடுத்து அவர்கள் இருவரும் கப்பலுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

அந்தக் கப்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் கரையில் இறங்கவோ, கரையில் இருப்பவர்கள் கப்பலுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கப்பலுக்குள் சென்ன தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், காய்ச்சல் நோயாளிகளின் ரத்தத்தின் மாதிரிகளை சேகரித்தனர். இந்த மாதிரிகள் கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்ட்டிடியூட் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

ஆய்வின் முடிவுகள் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களுக்கு கொரோனோ இல்லையெனத் தெரியவந்திருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை துறைமுக அதிகாரிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் முடிவுசெய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button