செய்திகள்

பல்வேறு இடங்களுக்கு இன்றைய தினம் அதிரடியாக கள விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி!

சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ (President Gotabaya rajapaksa) தெரிவித்தார்.

அதேநேரம் அச்சேவைகளை வழங்கும்போது எந்தவிதமான முறைக்கேடுகளும் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று (26) பிற்பகல் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்குச் சொந்தமான வேரஹெர அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

புகைப்படம் எடுப்பது முதல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வரையிலான அனைத்து பிரிவுகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட அலுவலக பணிக்குழாமினரை சந்தித்து நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

நேரம் அனைவருக்கும் மிகவும் பெறுமதியானதாகும். எனவே சேவை பெறுநர்களுக்கு உடனடியாக தமது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். தொழில்வல்லுனர்களைப்போன்று சாதாரண மக்களுக்கான சேவையினையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சேவையொன்றை பெற்றுக்கொள்வதற்காக வருகை தருகின்ற ஒருவருக்கு அதனை பொறுப்பேற்ற நேரத்தை குறிப்பிட்டு, மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள வர வேண்டிய நேரத்தையும் அறிவிப்பது முக்கியமானதாகும். அதன் மூலம் நிறுவனத்தில் வீணாக நேரத்தைக் கழிக்காது தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மக்களுக்கு முடியுமாக இருக்கும். மக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது அவசியம்.

நாட்டின் அதிகளவான மக்களுக்கு சேவையினை வழங்கும் நிறுவனமான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் போன்ற நிறுவனம் எப்போதும் முன்னுதாரணமாக செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

இதன்போது ஊழல், மோசடிகளுக்கு இடமளிக்காதிருப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் உறுதியாக செயற்பட வேண்டும். ஊழியர் வெற்றிடங்கள் இருக்குமானால் 54,000 பட்டதாரிகளிலிருந்து பொருத்தமானவர்களை அதற்காக தெரிவுசெய்ய முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நடைமுறையிலுள்ள முறைமைகள் ஒரு மாத காலப்பகுதியில் மாற்றப்பட வேண்டும் என்றும் அதனைக் கண்காணிப்பதற்காக தான் மீண்டும் வருகை தருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் மற்றும் அரச ஊழியர்களின் செயற்பாடுகளின் காரணமாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதனை மாற்றுவதற்கு இரு தரப்பினரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவளை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலைக்கும் இன்று பிற்பகல் ஜனாதிபதி கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்வைத்தியசாலையில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக நிவர்த்திசெய்து அதனை முழுமையாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவ் வைத்தியசாலையில் 68 விசேட வைத்தியர்களுக்கான தேவை இருந்தபோதும் அது 40 பேரின் மூலமே நிறைவேற்றப்படுகின்றது. சுமார் 100 சாதாரண வைத்தியர்களுக்கான தேவை உள்ள போதும் அதனை சுமார் 20 வைத்தியர்களே நிறைவேற்றி வருகின்றனர்.

700 கட்டில்கள் மற்றும் 09 வாட்டுக்களைக்கொண்ட இவ் வைத்தியசாலையில் தற்போது 04 வாட்டுக்கள் மாத்திரமே செயற்படுத்தப்படுகின்றது. அனைத்து குறைபாடுகளையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யும்போது அதற்கான அறிவித்தல்களை பிரசுரித்து உரிய முறைமைகளுக்கேற்ப அதனை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் காலி முகத்திடலுக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் வளாகத்திற்கும் ஜனாதிபதி இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். சுற்றியுள்ள பகுதிகளை அழகாகவும் முறையாகவும் பேணிவருவது தொடர்பாக ஜனாதிபதி இராணுவத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

முறையான திட்டமொன்றினூடாக அவ்வளாக சூழலை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

sources : virakesari.lk

Back to top button