செய்திகள்

வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா?

எருமை பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார்.

கர்நாடகாவில் மிகவும் பிரபலமான ‘கம்பாலா’ என்று அழைக்கப்படும் எருமைப் பந்தயத்தில் 142 மீட்டர் தூரத்தை 13.42 நொடிகளிலேயே 28 வயதாகும் ஸ்ரீனிவாச கௌடா கடந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

“எனது பள்ளிக் காலத்தில் இருந்தே கம்பாலா பந்தயங்களை பார்த்து வந்துள்ளேன். அதனால் எனக்கும் இதில் பங்கேற்க ஆர்வம் வந்தது,” என்று பிபிசியிடம் கூறினார் ஸ்ரீநிவாச கௌடா. 

தானும் தனது ‘அணியின் சக உறுப்பினர்களான’, இரு எருமை மாடுகளும் சிறப்பாக செயல்பட்டது குறித்து மகிழ்ச்சியாக உள்ளார் அவர்.

தக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த மூடுப்பித்ரி எனும் இடத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாச கௌடா.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர் கம்பாலா எருமை பந்தயத்தில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 

‘உசைன் போல்ட் உடன் ஒப்பிட வேண்டாம்’

உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 நொடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ளது. 

எனினும் ஸ்ரீநிவாஸா கௌடாவை உசைன் போல்ட் உடன் ஒப்பிடுவதற்கு, அவர் கலந்துகொண்ட கம்பாலா எருமை பந்தயத்தை நடத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ஓட்டப் பந்தயங்களில் பல வரலாற்று பதிவுகளை முறியடித்தவர் உசைன் போல்ட்
ஓட்டப் பந்தயங்களில் பல வரலாற்று பதிவுகளை முறியடித்தவர் உசைன் போல்ட்

“யாருடனும் ஒப்பிடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று பிபிசியிடம் தெரிவித்தார் கம்பாலா அகாடமியின் தலைவர் பேராசிரியர் கே. குணப்பல கடம்பா.

“ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகளில் நேரத்தை கணக்கிட துல்லியமான வழிமுறைகள் உள்ளன,” என்று அவர் கூறியுள்ளார்.

உசைன் போல்டைவிட ஸ்ரீநிவாச கௌடா வேகமாக ஓடியதாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் கூறப்பட்டதால் கடம்பா இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவின் ஜல்லிக்கட்டு 'கம்பாலா

கம்பாலா என்றால் என்ன?

‘கம்பாலா’ என்றால் துளு மொழியில் ‘நெல் பயிரிடப்படும் களிமண் வயல்’ என்று பொருள். 

இந்த விளையாட்டு கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் மிகவும் பிரபலமானது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை போலவே கம்பாலாவும் பாரம்பரியம் மிக்கது.

கம்பாலா போட்டிகளின்போது 132 அல்லது 142 மீட்டர் தூரத்தை, ஒன்றாக இணைத்து கட்டப்பட்ட எருமை மாடுகளைப் பிடித்துக்கொண்டு, வயல்வெளியில் வேகமாக ஓடிக் கடக்க வேண்டும். 

2014இல் ஜல்லிக்கட்டு நடத்துவதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட சமயத்தில், ஜல்லிக்கட்டு போன்று கால்நடைகளை பயன்படுத்தப்படும் போட்டிகள் அனைத்தையும் இந்திய உச்ச நீதிமன்றம் தடை செய்தது. 

கர்நாடகாவின் ஜல்லிக்கட்டு 'கம்பாலா': வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா இவர்?

2016இல் கம்பாலா போட்டிகள் அனைத்துக்கும் கர்நாடக உயர் நீதிமன்றமும் தடை விதித்தது. சாட்டைகளை பயன்படுத்தக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் 2018இல் கர்நாடக அரசு கம்பாலா போட்டிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கியது. 

ஸ்ரீநிவாச கௌடா போன்ற தமது மாணவர்களுக்கு விலங்குகளை காயப்படுத்தாமல் கம்பாலா விளையாட கற்றுக்கொடுத்துள்ளதாகக் கூறுகிறார் பேராசிரியர் கடம்பா. 

பல ஆண்டுகளுக்கு முன்பு விளையாடப்பட்ட கம்பாலா மற்றும் தற்போது தாங்கள் விளையாடும் கம்பாலா ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு இருப்பதாக அவர் கூறுகிறார். 

கம்பாலா எருமை பந்தயத்துக்கு அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது.

Back to top button