செய்திகள்

கொரோனா வைரஸ்: இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறதா?

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களும், இலங்கையில் சுற்றுலா வழிக்காட்டிகளாக கடமையாற்றியவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட 52 வயது மதிக்கத்தக்கவருக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இரண்டு பேரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டினார்.

கொரோனா வைரஸினால் முதலில் பாதிக்கப்பட்ட நபர் கடந்த சில தினங்களில் மாத்திரம் 60 பேருடன் நெருங்கி பழகியுள்ளதாகவும், அவர்களில் ஐந்து பேர் மாத்திரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 25 பேருடன் நெருங்கி பழகியுள்ளதாகவும், அவர்களில் 8 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனில் ஜாசிங்க

இந்த நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் நெருங்கி பழகியவர்கள் குறித்து சுகாதார அமைச்சகம், இராணுவத்தின் உதவியுடன் மிகவும் நெருங்கிய அவதானித்து வருவதாக மருத்துவர் அனில் ஜாசிங்க கூறினார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 64 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிடுகின்றது.

பல்கலைக்கழகங்கள் பூட்டு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நாளைய தினம் முதல் இரண்டு வாரங்களுக்கு பல்கலைக்கழகங்கள் மூடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்வி பீடங்கள் அனைத்தும் மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 29ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோன்று, இலங்கையிலுள்ள அனைத்து பாலர் பாடசாலைகளும் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்படவுள்ளதாக மகளிர், சிறுவர் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அந்த அமைச்சகம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சகம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

3 நாடுகளிலிருந்து வருகைத் தர தடை

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு அனைத்து விமான சேவை நிறுவனங்களிடமும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தீர்மானமானது, நாளைய தினம் (14) முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அமலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி.நிமல்சிறி தெரிவிக்கின்றார்.

சுகாதார அமைச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதா?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை அடுத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சிறு வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்துக் கொள்ளும் வகையில் கூட்ட நெரிசல் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

வைரஸ் தொற்று பரவுவதை அடுத்து, ஏதேனும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே மக்கள் அதிகளவில் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

எனினும், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்ல தடை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களை தேடி செல்லும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தகவலை இன்று வெளியிட்டது.

கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தம்

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிடுகின்றது.

நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு கோரிக்கை

சஜித் பிரேமதாஸபடத்தின் காப்புரிமைSAJITH’S MEDIA

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து, நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் கடந்த 2ஆம் தேதி கலைக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, சஜித் பிரேமதாஸ இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தாது, மக்களின் சுகாதார நிலைமை குறித்து முதலில் அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Back to top button