செய்திகள்

ஊரடங்கு தொடர்வதற்கான முக்கிய இரு காரணங்களை குறிப்பிடுகிறார் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்தன!

பொதுமக்களின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்துவதற்காகவும்  யாழ். குடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் அவற்றிலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தினால்  ஊரடங்கு சட்டத்தினை  மீண்டும் நாடுமுழுவதும் அமுல்படுத்த நேரிட்டதாக  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20 ஆம் திகதி  முதல் அமுல்படுத்தப்பட்டு வரும்  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன   வழங்கியுள்ள  அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு  பொதுமக்களிடம்  கேட்டுக்கொண்டார்.

கடந்த நாட்களில் ஊரடங்கு சட்டத்தை  மீறியதற்காக மொத்தம் 1,754 நபர்கள் மற்றும் 447 வாகனங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ்  பரவலை தடுத்து  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும்  வைரஸ் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய கட்டத்திற்கு குறைக்கும் வரை பாதுகாப்பு அமைச்சினால்  மீண்டும் ஊரடங்கு சட்டம்  பிறப்பிக்கப்படும் எனவும் இவ்வேளையில் மக்கள் தமது வீடுகளுக்குள் தரித்திருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறும் பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். நாங்கள் நடமாட்டத்தை நிறுத்தி, நேரடி தொடர்புகளை தவிர்க்கா விட்டால்  வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினம்.

பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ளவேளையிலும்   அத்தியாவசிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளுக்கு சமூகமளிக்க  சேவை அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

யாழில் இடம்பெற்ற  சம்பவத்தின்  காரணமாகவே   மன்னார், வாவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் உள்ள  மக்களிடையே வைரஸ் பரவலை தடுக்கவேண்டிய நிர்பந்தம்  அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால், முழு வடக்கு பிராந்தியத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும்  இந்த திடீர் முடிவை தாங்கள் எடுத்ததாகவும், ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது பயணங்களை தவிர்த்துகொள்ளுமாறும், அனைவரும் தமது  வீடுகளில் இருக்க வேண்டும்.

நாட்டில் வசிக்கும்  22 மில்லியன் மக்கள்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் மற்றும் படை வீரர்கள் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், படையினர்  மற்றும் பொலிஸ்  உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் செய்யும் கடினமான பணிகள் பயனற்றதாக அமைந்து விடுவதோடு  ஒட்டுமொத்த மக்களும் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டிவரும்.

படையினரால்  நிறுவப்பட்ட தனிமைப்படுத்தும் மையங்களில் 3,500 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, நாங்கள் 19,000 க்கும் மேற்பட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளோம், மேலும் அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளோம். இந்த நபர்கள் வீட்டிலேயே தங்கி சுகாதார அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி செயற்படுமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்களைப் பெறுவதற்காக ஊரடங்கு சட்டம்  நீக்கப்பட்ட சில சமயங்களில் பொறுப்புடன் செயல்படுமாறு பாதுகாப்பு செயலாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button