செய்திகள்

இந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்?

2021ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை ‘ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகத் தொற்றால் பெரிதும் பாதிப்புக்குள்ளான துறைகளில் சுற்றுலாத்துறை முக்கியமானது. தொற்றுநோய் குறித்த அச்சுறுத்தலால் லட்சக்கணக்கானோர் தங்களது பயணங்களை தள்ளி வைக்க அல்லது ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால், புதிதாக பிறந்துள்ள 2021ஆம் ஆண்டில் இயல்புநிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் பலரும் ஆவலுடன் பயணம் செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

பாஸ்போர்ட்டும் விசாவும்

சர்வதேசப் பயணங்களில் இரண்டு விதமான பயண ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டில் இருந்து வெளிநாடு செல்ல விரும்புவோர், அந்த நாட்டின் எல்லையைக் கடப்பதற்கு வழங்கப்படும் உரிமை ஆவணம் பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டு. இந்த கடவுச் சீட்டு பெரும்பாலும் அந்த நாட்டின் குடிமக்களுக்கே வழங்கப்படும்.

அந்த பாஸ்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு தனது சொந்த நாட்டின் எல்லையைக் கடந்த நபர், வேறொரு நாட்டின் எல்லைக்குள் நுழைவதற்கு அவர் நுழைய விரும்பும் நாடு தருகிற விசா தேவைப்படும்.

ஆனால், எல்லா நாடுகளில் நுழைவதற்கும், எல்லா நாட்டுக் குடிமக்களுக்கும் விசா தேவைப்படாது. ஒவ்வொரு நாடும் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருகிறவர்களுக்கு விசா தேவையில்லை என்று விதிவிலக்கு அளித்திருக்கும். எடுத்துக்காட்டாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சில குறிப்பிட்ட நாடுகளில் நுழைவதற்கு விசா பெறவேண்டிய தேவை இல்லை என்று அந்த நாடுகள் விதிவிலக்கு அளித்திருக்கும்.

இந்த நிலையில், அப்படி பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டை மட்டும் கொண்டே ஒரு நாட்டை சேர்ந்தவர் உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா (நுழைவு இசைவு) இல்லாமல் பயணிக்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்டு தற்போது தரவரிசைப் பட்டியல் வெளிவந்துள்ளது.

யாருக்கு முதலிடம் – இந்தியாவின் இடம் என்ன?

சுமார் 110 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது. அதாவது, ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டை வைத்திருந்தால் உலகிலுள்ள 191 நாடுகளுக்கு நுழைவு இசைவு இல்லாமலே பயணிக்க முடியும். இந்தப் பட்டியலில் ஆசிய நாடான சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம், சிங்கப்பூரர்கள் உலகின் 190 நாடுகளுக்கு எவ்வித நுழைவு இசைவும் இன்றி எளிதில் பயணிக்க முடியும். மூன்றாவது இடத்திலுள்ள தென் கொரிய கடவுச்சீட்டை கொண்டு 189 நாடுகள் வரை பயணிக்க முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தர வரிசையில், கடந்த ஆண்டை விட ஓர் இடம் பின்னடைவை சந்தித்து தற்போது 85ஆவது இடத்தில் உள்ளது. இந்தியர்கள் தங்களது கடவுச்சீட்டை மட்டும் வைத்துக் கொண்டு உலகின் 58 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்று ‘தி ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2021இல் இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?

இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான் (110ஆவது இடம்), இராக் (109), சிரியா (108) மற்றும் பாகிஸ்தான் (107) உள்ளிட்ட நாடுகள் கடைசி இடங்களை பிடித்துள்ளன. இந்த நாடுகளின் கடவுச்சீட்டை வைத்துள்ளவர்கள் 32க்கும் குறைவான நாடுகளுக்கே நுழைவு இசைவின்றி பயணிப்பது சாத்தியம்.

இந்தியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகத் துல்லியமான பயணத் தரவுத்தளத்தைப் பராமரிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) பிரத்யேக தரவு மற்றும் அதுகுறித்த தங்களது நிறுவனத்தின் மேலதிக ஆராய்ச்சிகளை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் கூறுகிறது.

இதன்படி, இந்த தரவரிசை பட்டியலில் 85ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்கள் உலகிலுள்ள 58 நாடுகளுக்கு செல்வது சாத்தியமாகிறது.

அதாவது, ஆசிய கண்டத்திலுள்ள பூட்டான், கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மக்காவ், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்ட் போன்ற நாடுகளுக்கு நுழைவு இசைவின்றி இந்தியர்கள் செல்ல முடியும்.

ஆனால், ஐரோப்பிய கண்டத்தை பொறுத்தவரை செர்பியா என்னும் ஒரேயொரு நாட்டுக்கு மட்டுமே இந்தியர்கள் நுழைவு இசைவின்றி பயணிக்கக்கூடிய நிலை உள்ளது.

2021இல் இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?

ஆனால், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள போட்ஸ்வானா, எத்தியோப்பியா, கென்யா, மடகாஸ்கர், மொரீஷியஸ், உகாண்டா, ஜிம்பாப்வே உள்ளிட்ட 21 நாடுகளுக்கு இந்தியர்கள் எளிதில் பயணிக்க முடியும்.

அதேபோன்று, பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் ஓசியானியாவிலுள்ள குக் தீவுகள், பிஜி, மார்ஷல் தீவுகள் உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கு இந்தியர்கள் நுழைவு இசைவின்றி செல்லலாம்.

இதுமட்டுமின்றி, ஜமைக்கா உள்ளிட்ட 11 கரீபியன் நாடுகளுக்கும், அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியா, எல் சல்வடோர் ஆகிய இரு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்த இரான், ஜோர்டான், கத்தார் ஆகிய மூன்று நாடுகளுக்கும் எவ்வித நுழைவு இசைவும் இன்றி இந்திய கடவுச்சீட்டை கொண்டு பயணிக்க முடியும் என்று இந்த ஹென்லி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடு எது?

இந்தியர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடு என்ன?

ஒவ்வொரு ஆண்டும் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் 2.63 கோடி இந்தியர்கள் பயணம் கொண்டதாக ஸ்டட்டிஸ்டா எனும் தரவுத்தளம் கூறுகிறது. அதாவது, கடந்த 2000ஆவது ஆண்டு பயணம் மேற்கொண்ட 44 லட்சம் இந்தியர்களுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு சுமார் ஆறு மடங்கு அதிகமான இந்தியர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் வியப்பளிக்கும் விடயம் என்னவென்றால், 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட ஒரு ஆண்டில் கூட பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவே இல்லை. மாறாக, ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அளவில் சீரான வளர்ச்சியை கண்டு வந்துள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்று பரவலால் 2020ஆம் ஆண்டு உலகமே முடங்கியதால் இதில் நிச்சயம் மிகப் பெரிய வீழ்ச்சி இருக்குமென்று கருதப்பட்டாலும், கொரோனாவுக்கு பிறகு பயணம் மேற்கொள்ள ஆவலுடன் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த பிளாக்பாக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்தியர்களின் விருப்பத்திற்குரிய வெளிநாடாக எந்த நாடு உள்ளது என்பதை அறிய கூகுள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘டெஸ்டிநேஷன் இன்சைட்ஸ் வித் கூகுள்’ என்ற சுற்றுலாத்துறைக்கான பிரத்யேக தகவல் தளத்தை பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

2021இல் இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?

கூகுள் தேடுபொறியை பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ளும் தேடலை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த தளத்தில், இந்தியர்கள் கடந்த ஓராண்டில் விமானப்போக்குவரத்து குறித்து அதிகம் தேடியுள்ள வெளிநாடுகளின் பட்டியலில் மாலத்தீவு முதலிடத்தில் உள்ளது. தாய்லாந்து, கத்தார், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதுவே நகர வாரியாக பார்க்கையில், மாலத்தீவின் தலைநகரான மாலே முதலிடத்திலும், பாங்காக், தோகா, கோலாலம்பூர், துபாய் உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

உள்நாட்டை பொறுத்தவரை, மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. மேலும், நகரங்களை பொறுத்தவரை, நாட்டின் தலைநகரான டெல்லிக்கு செல்வது குறித்த அதிகளவிலான தேடல்கள் இருந்துள்ளதாக தெரிகிறது. பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத்துக்கு அடுத்து சென்னை இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Back to top button