செய்திகள்

மிரட்டும் கொரோனா: ஒரே நாள் பலி எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்ட மலேசியா

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் கடந்த 24 நான்கு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் இது புதிய உச்சமாகும். இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 150 பேருக்கு நோய்த்தொற்று இருப்பதும் உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2,470 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

இதேவேளையில் கொரோனா வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு, முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கையும் மலேசியாவில் அதிகரித்துள்ளது ஆறுதல் தகவல். இன்று மட்டும் 68 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதுவரை மலேசியாவில் 388 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்

இதற்கிடையே சில புள்ளி விவரங்களையும் மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்டது. சுமார் 55.6 விழுக்காட்டினர் 60 வயதைக் கடந்தவர்கள் என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மேலும், இவர்களில் பலருக்கு நீரிழிவு, இரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“மொத்தம் 67.6 விழுக்காட்டினருக்கு சிறுநீரக, இருதய நோய், நீரிழிவு உள்ளிட்ட நாட்பட்ட நோய்கள் இருந்துள்ளன. உயிரிழந்தவர்களில் 27 மற்றும் 37 வயதான ஆடவர்களும் அடங்குவர்,” என அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

“நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்காக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் தனியார் அமைப்புகள் மட்டுமல்லாமல் பிற அமைச்சுகளும் உதவி வருகின்றன.

“உயர்கல்வி மையங்கள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பத்து ஆய்வுக் கூடங்களை அமைக்க இரு அமைச்சுகள் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு கூடுதலாக 1,414 அதாவது மாதத்துக்கு 42,420 பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும்,” என்று டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button