செய்திகள்

ராஜேந்திர சோழன் அரண்மனை கண்டுபிடிப்பா? கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் வெளிப்பட்ட கட்டுமானம் என்ன? – Raja RAja Cholan

கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் மாநில தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் சில கட்டடத் தொகுதிகள் கிடைத்துள்ளன. இது ராஜேந்திர சோழனின் அரண்மனையின் ஒரு பகுதி என கருதப்படுகிறது.

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை கீழடித் தொகுதி, ஆதிச்சநல்லூர் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகை மேடு பகுதியிலும் தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சமீபத்தில் அகழாய்வு துவங்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் சில அடி ஆழத்திலேயே செங்கற்களால் ஆன பதிமூன்று சுவர்கள் வெளிப்பட்டிருக்கின்றன. இது தவிர, சில செப்புக் காசுகள், பானை ஓடுகள், இரும்பு பொருட்கள் ஆகியவையும் இங்கிருந்து கிடைத்திருக்கின்றன. இது தவிர, சீன Seladan மட்பாண்டமும் கிடைத்திருக்கிறது.

“இப்போது ஐந்து குழிகள் மட்டும் தோண்டப்பட்டதில் 13 சுவர்கள் சுமார் நான்கைந்து மீட்டர் தூரத்திற்கு கிடைத்திருக்கின்றன. இன்னும் பத்துக்கும் மேற்பட்ட குழிகளை அமைக்கும் பட்சத்தில் பெரிய அளவிலான சுவர்களைப் பார்க்க முடியும்” என்கிறார் மாநிலத் தொல்லியல் துறையின் துணை இயக்குனர் சிவானந்தம்.

raja raja cholan
படக்குறிப்பு,மாளிகை மேடு அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 13வது நூற்றாண்டுக்கு முந்தைய அரண்மனைகள் எதுவுமே தற்போது இல்லை. தற்போதுள்ள அரண்மனைகள் அனைத்துமே 16ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. “கோவில்களை கருங்கற்களில் கட்டிய மன்னர்கள் அரண்மனைகளை செங்கல், மரத்தில்தான் கட்டினார்கள். ஆகவே அவை அடுத்தடுத்த படையெடுப்புகளில் அழிக்கப்பட்டன” என்கிறார் சிவானந்தம்.

தற்போதைய அகழாய்வில் கிட்டத்தட்ட 1 அடி நீளமுடைய ஆணிகள் கூட கிடைத்திருக்கின்றன. “இந்த அரண்மனையில் பெரிய அளவில் மரங்களைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். கருங்கல் அடித்தளத்தின் மீது மரங்களை வைத்து இந்தக் கட்டுமானங்கள் செய்யப்பட்டிருக்கக்கூடும்.

இது ஒரு இரட்டை அடுக்கு மாளிகையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்த காலகட்டத்தைச் சேர்ந்த மரமோ, மரத் துண்டோ கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தால் காலத்தை எளிதில் கணிக்க முடியும்” என்கிறார் சிவானந்தம்.

மாளிகை மேடு பகுதியில் அகழாய்வு நடப்பது முதல்முறையல்ல. 1993ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதியில் அகழாய்வுகள் நடந்துவருகின்றன. 2008ல் நடந்த அகழாய்வில் மதில் சுவர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

இங்கே கிடைத்த காசு சோழர் காலத்தைச் சேர்ந்த காசாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கிடைத்திருக்கும் மட்பாண்டத்தை வைத்துப் பார்க்கும்போது இந்தப் பகுதிக்கும் வெளிநாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் நடந்திருக்கலாம் என்றும் சொல்லலாம் என்கிறார்கள் அகழாய்வாளர்கள்.

தற்போது அரியலூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரச் சோழனால் (ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044) உருவாக்கப்பட்ட தலைநகரமாகும். கங்கை சமவெளிப் பகுதியில் மேற்கொண்ட படையெடுப்பில் கிடைத்த பெரும் வெற்றியை அடுத்து சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவினான்.

“இப்போது கிடைத்திருப்பது ராஜேந்திர சோழன் கட்டிய அரண்மணையின் அடிச்சுவர்தான். இந்த அரண்மனை சோழர் காலம் முழுவதுமே இருந்தது. மூன்றாம் குலோத்துங்க சோழன் குலசேகர பாண்டியனைத் தோற்கடித்து, மதுரைக் கோட்டையைத் தகர்த்து, அரண்மனைகளை இடித்துத் தள்ளினான்.

raja raja cholan
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேடு – தமிழர் வரலாறு

இதற்குப் பிறகு மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து தஞ்சாவூர், பழையாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் இருந்த அரண்மனைகளை இடித்து மண்ணோடு மண்ணாக்கினான்.

இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளில் இந்த மாளிகையில் இருந்த செரித்துப்போன மரப் பகுதிகள் கிடைத்தன. இந்த மாளிகையைச் சேர்ந்த இரும்புப் பொருட்கள், ஆணிகள் ஆகியவை கிடைத்தன. கருங்கல் பீடத்தின் மீது மரத்தூண்களை வைத்து இந்த அரண்மனை கட்டப்பட்டிருந்தது” என்கிறார் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

ராஜராஜன் காலம் முடிந்து ராஜேந்திர சோழனின் தனி ஆட்சிக்காலம் துவங்கிய பிறகு முதல் 10 ஆண்டுகள் அதாவது 1014 முதல் 1024வரை தஞ்சாவூரில் இருந்தபடிதான் ஆட்சி செலுத்திவந்தான்.

ஆனால், தஞ்சை மருதநிலப் பகுதியாக இருந்தது. வயல்வெளிகள் மிகுந்திருந்தன. பெரும் படைகளை உருவாக்கிய ராஜேந்திரன், அந்தப் படைகளை நகர்த்தும்போது வயல்கள் நாசமடைந்தன.

ஆகவேதான் கொள்ளிடத்திலிருந்து 5 மைல் தூரத்தில் இருந்த சமவெளிப் பகுதியில் ஒரு புதிய தலைநகரை உருவாக்கினான் என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

சோழ கங்கம் என்ற மிகப் பெரிய ஏரி கட்டப்பட்டது. அதில் கங்கையிலிருந்து எடுத்துவந்த நீர் ஊற்றப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மிகப் பெரிய மதில்கள், அரண்மனைகள், தஞ்சை பெரிய கோவிலைப் போன்ற கோவில் ஆகியவை கட்டப்பட்டன. இதில், கோவிலைத் தவிர பிற பகுதிகள் மறைந்துவிட்டன.

Source : BBC

Back to top button