செய்திகள்

கொரோனா ஊரடங்கு: மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்

இன்று ஊரடங்கு முடிந்து ரயில்கள் மீண்டும் இயங்கும் என நம்பி மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியது.

பல்லாயிரம் பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமலாக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிகிறது.

எனினும், இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவித்தார்.

ரயில் நிலையத்தில் கூட்டம் கூடிய தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் அங்கு விரைந்தனர். கூட்டத்தைக் கலைக்க காவல் துறை தடியடியும் நடத்தியது.

இப்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் அங்கு இருந்த கூட்டத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஆதித்ய தாக்ரே தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் டெல்லியில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனந்த் விகார் பேருந்து முனையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவல் மூலம் உண்டாகுமோ என்ற அச்சம் எழுந்தது.

பின்னர் அவர்கள் டெல்லி மற்றும் உத்தரப்பிரதே மாநில அரசுகள் இயக்கிய சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button