செய்திகள்

ஜோதிகா பேச்சு சர்ச்சை: ’மதங்கள் கடந்து மனிதமே முக்கியம்’ – சூர்யா விளக்கம்

நடிகை ஜோதிகா விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் சில நாட்களாக சமூகவலைதளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் நடிகர் சூர்யா இந்தப் பிரச்சனை குறித்து ‘அன்பை விதைப்போம்’ என ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

என்ன பேசினார் ஜோதிகா?

கடந்த வாரம் தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வில் விருது பெற்ற நடிகை ஜோதிகா, “பிரகதீஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. கண்டிப்பாக அதைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கெனவே பார்த்துள்ளேன். மிகவும் அழகாக உள்ளது. உதய்பூரில் உள்ள அரண்மனைகள் போன்று ஆலயத்தை நன்கு பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனை ஒன்றில் நடந்தது. அந்த மருத்துவமனை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் அங்கே பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது. எல்லோருக்கும் ஒரு கோரிக்கை. ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார். கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு நான் கோவிலுக்குப் போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் மிகவும் முக்கியம். அவற்றிற்கு நிதியுதவி அளிப்போம்.” என்று கூறியிருந்தார்.

சூர்யாவின் அறிக்கை

சூர்யாபடத்தின் காப்புரிமை FACEBOOK

ஜோதிகாவின் இந்த பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில்,

அது தொடர்பாக அவரின் கணவரும், நடிகருமான சூர்யா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும். ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா அவர்கள் பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது,”

“கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை ‘சிலர்’ குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை’ என்பது ‘திருமூலர்’ காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை,”

“பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனாதொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். ‘மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்’ என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.” என்று நடிகர் சூர்யா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button