செய்திகள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு: பசியால் துடித்த குழந்தைகள்; சமைப்பது போல நடித்த தாய்

தனது குழந்தைகளுக்கு உணவு சமைப்பதைப் போல பாவனை காட்டுவதற்காக, கற்களை வேகவைத்து வந்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் .

எட்டு குழந்தைகளுக்கு தாயான பெனினா பஹட்டி என்ற அந்த பெண்மணி, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக தனது குழந்தைகளுக்கு தினசரி உணவு அளிக்க முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

கணவரை இழந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவர், கென்யாவிலுள்ள கடற்கரை நகரான மொம்பாசா என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

குழந்தைகள் உணவு கேட்கும் போதெல்லாம், சமையல் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் வெறும் கற்களை போட்டு சமையல் செய்வதைப் போல தன் குழந்தைகளின் முன்னர் அவர் பாவனை செய்து வந்துள்ளார்.

உணவு தயாராகிவிடும் என காத்துக்கொண்டிருக்கும் குழந்தைகள், தங்கள் அறியாமலே தூங்கும் வரை சமையல் செய்வதை போல அவர் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

இது தொடர்பான ஒரு காணொலியை கென்யாவின் NTV என்ற ஊடகம் பகிர்ந்துள்ளது.

பெனினாவின் நிலையை கண்டு அதிர்ந்து போன அவரது அண்டை வீட்டார்கள் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பதிவை பார்த்த பலரும் பெனினாவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

தற்போது பெனினாவுக்கு அவரது அண்டை வீட்டார் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்துள்ளனர்.

தற்போது இந்த வங்கி கணக்கில் தன்னார்வலர்கள் பலர், செல்பேசி செயலி ஒன்றின் மூலம் பண உதவி அளித்து வருகின்றனர்.

தற்போது அவருக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் நிதியுதவி கிடைத்து வருகிறது.

தனக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்துள்ள அவர், நடந்துள்ளவை அனைத்தும் ஓர் அற்புதம் போல தோன்றியதாக டியூகோ நியூஸ் என்ற ஊடகத்திடம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button