செய்திகள்

மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டாரா? உண்மை என்ன?

ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவரின் மகள் அறிவிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை தமிழகத்தின் பிரபல ஊடகங்கள் இன்று காலை முதல் ஒளிபரப்பிய நிலையில், அதன் உண்மை தன்மை பற்றி அலசுகிறது இந்த செய்தி.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த சி. மோகன், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு வந்து சலூன் கடை ஒன்றைத் துவங்கினார். இவருக்கு 9ஆம் வகுப்புப் படிக்கும் நேத்ரா என்ற 13 வயது மகள் இருக்கிறார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு இவரும் தன் சலூன் கடையை மூடிவிட்டார்.

“அப்போது எங்கள் பகுதியில் வசிக்கும் பல ஏழைகள் தங்கள் கஷ்டத்தைச் சொல்லி அழுதார்கள். அப்போதுதான் அவர்களுக்கு உதவலாம் என நானும் என் குடும்பத்தினரும் முடிவெடுத்தோம். சின்னச் சின்னதாக உதவிகளைச் செய்ய ஆரம்பித்தோம். பிறகு அண்ணா நகர் காவல்நிலைய அதிகாரிகளும் காய்கறிகள் போன்றவற்றைக் கொடுத்து உதவிகளைச் செய்தனர். இது இவ்வளவு பிரபலமாகுமென்று நினைக்கவில்லை” என்கிறார் மோகன்.

பிரதமரின் உரையில் இடம்பெற்ற பிறகு, பல்வேறு தரப்பினரும் வந்து பாராட்டிய நிலையில், மதுரை மாவட்ட பா.ஜ.கவினரும் மாவட்டத் தலைவர் கே.கே. சீனிவாசன் தலைமையில் அவரை நேரில் சந்தித்துப் பாராட்டினர். அப்போது மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பா.ஜ.கவின் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. மோகன் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்து விட்டார் என்ற செய்தி வைரலாக பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மோகன், “பாராட்ட வந்தவர்கள் அந்த அட்டையையும் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அந்தத் தருணத்தில் மறுத்தால் நன்றாக இருக்காது என்பதால் ஒன்றும் சொல்லவில்லை. எந்தக் கட்சியிலும் சேர்வது குறித்தும் நான் முடிவெடுக்கவில்லை. ரொம்பவும் குழப்பமாக இருக்கிறது” என்றார்.

அந்த பஞ்சாயத்து முடிந்து சில நாட்கள் ஆகும் நிலையில், ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரரின் மகள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

உண்மையில், ஐக்கிய நாடுகளின் சபை அப்படியான ஓர் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. மாணவி நேத்ராவை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளது UNADAP (மேம்பாடு மற்றும் அமைதிக்கான ஐக்கிய நாடுகளின் சங்கம்) என்கிற ஓர் அரசு சாரா அமைப்பு.

இது ஐ.நா., சபையின் கிளை நிறுவனமோ அல்லது துணை அமைப்போ அல்ல. இந்நிறுவனத்தின் இலச்சினையும ஐ.நா., சபையின் இலச்சினையும் வேறு. UNADAP நிறுவனம்தான் மாணவி நேத்ராவுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான உதவித்தொகையையும் அளித்துள்ளது.

ஐ.நா., சபை எவ்வித உதவித்தொகையும் அறிவிக்கவில்லை.

இதுகுறித்து நாம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு விளக்கம் கொடுத்த UNADAP, “நாங்கள் ஒரு அரசு சாரா அமைப்பு, ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக மன்றத்தின் (UN ECOSOC) அங்கீகாரத்தை பெற்றுள்ளோம். UNADAP என்பது ஒரு ஐ.நா. நிறுவனம் அல்ல,” என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

Back to top button