செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தமிழ்நாட்டில் ரத்து; அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு தேர்வுகளை ஒத்திவைக்க முடியாதா என நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருந்தது.

இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார்.

“பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், 11ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டுப்போன வேதியியல் கணக்கு பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்), வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி (பழைய பாடத்திட்டம்) ஆகியவற்றுக்கான தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை தேர்வு நடத்த ஏற்கனவே தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இந்த நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தேர்வுகளை தள்ளிவைக்க பரிசீலிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையிலும் சில மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நோய்த் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லையென நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, நோய்த் தொற்றின் தற்போதைய போக்கைக் கருத்தை கருத்தில் கொண்டு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளும் பதினொன்றாம் வகுப்புத் தேர்வுகளும் ரத்துசெய்யப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீத மதிப்பெண்களும் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.

12ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரை, ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப 12ஆம் வகுப்புத் தேர்வுக்கேற்ப மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும்” என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button