செய்திகள்

‘மீண்டும் கொரோனா பரவினால் கட்டுப்படுத்துவது கடினம்’: வைத்தியர் அனில் ஜாசிங்க

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

நாடு வழமையான செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டாலும் கூட மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. விமான நிலையங்களை மீண்டும் திறக்கும் நேரங்களில் வைரஸ் பரவல் ஏற்படும் என்று சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அச்சுறுத்தல்களை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தலின் மத்தியில் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவந்துள்ள நிலையில் தற்போதைய நிலைமைகள் குறித்தும், வெளிநாட்டவர்களை நாட்டுக்குள் வரவழைக்க எடுக்கும் மாற்று நடவடிக்கைகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்தகால அச்சங்களை மறந்து மக்கள் வழமையான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் . எனினும் மக்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கண்டிப்பானது.

இப்போது நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ள காரணத்தினால் வைரஸ் தாக்கம் இல்லையென அர்த்தப்படாது. மீண்டும் வைரஸ் பரவல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருந்துகொண்டே உள்ளன.

எனவே மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அண்மைக் காலங்களில் மக்கள் சுகாதார செயற்பாடுகளை மறந்து செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இது மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இப்போது வரையில் வெளிநாட்டவர் எவரும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே நாட்டினுள் வைரஸ் தொற்றுகள் இல்லாத காரணத்தினால் மக்கள் அச்சமின்றி உள்ளனர்.

எனினும் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் நேரங்களில் வெளிநாட்டவர் இலங்கைக்குள் வரும் நேரங்களில் மீண்டும் வைரஸை அவர்கள் காவிக்கொண்டு வருவதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த பரவல் மீண்டும் நாட்டினுள் வந்தால் எமது மக்கள் அதிகமாக பாதிக்க நேரிடும். எனவே மக்கள் இப்போதே சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது கட்டாயம் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்து தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்றது. மீண்டும் ஒரு தாக்குதல் அலை வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இலங்கைக்குள் மீண்டும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த கடினமாகிவிடும் என்பதை சகலரும் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிரலாமே 🙂 - அட்சயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button