செய்திகள்

வடக்கு , கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது: வாசுதேவ பதிலடி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் தவறானது. செயலணியின் நோக்கம் தொல்பொருட்களை பாதுகாப்பதே தவிர முரண்பாடுகளை தோற்றுவிப்பது அல்ல.

செயலணியின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து  ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் பேசவுள்ளேன். அரசாங்கத்தின் கொள்கைக்கு அமையவே செயலணிகள் செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒரு  பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும்.

தெற்கில் சிங்களவர்கள் அதிகமாக வாழ்கின்றமையினால் அம்மாகாணம் பெரும்பான்மையினத்தவர்கள் உரிமைக் கொண்டாடுகிறார்கள் அதேபோலதான்  வடக்கு மற்றும் கிழக்கிலும்.

வடக்கில் தமிழ் மக்கள் வரலாற்று காலம் தொடக்கம் வாழ்ந்துள்ளமைக்கான ஆதாரங்கள்  மத தலங்களின் ஊடாகவும், மத  வழிப்பாடுகளுடனும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான தன்மையே  கிழக்கிலும்  காணப்படுகிறது. இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு அனைத்து இன மக்களின் உரிமை மற்றும் கலாச்சாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் பூர்வீகம் வடக்கு மற்றும் கிழக்க என்பது அனைவரும் அறிந்த விடயமே. நாட்டை பிரித்தாள வேண்டும் என்ற  எண்ணத்தினால் யுத்தம் தோற்றமடைந்தது.  நாடு பிளவுப்படுவதற்கு எப்போதும் அனுமதி வழங்க முடியாது. இருப்பினும் அவரவர் உரிமைகள்  முரண்படாத வகையில் வழங்கப்படுதல் அவசியமாகும்.

தொல்பொருள் தொடர்பில் செயலணி நியமிக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதை செயலணயின் உறுப்பினர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். தொல்பொருள்  பாதுகாப்புக்காகவே செயலணி நியமிக்கப்பட்டுள்ளதே தவிர இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு அல்ல. ஆகவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு  தனிப்பட்ட முறையில் தெளிவுப்படுத்தவுள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button