செய்திகள்

வங்கிகளின் கடன் வழங்கலைத் துரிதப்படுத்த புதிய திட்டம்

கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் கடன்வழங்கலைத் துரிதப்படுத்துவதற்கு ஒரு கொடுகடன் உத்தரவாதம் மற்றும் வட்டி உதவுதொகைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயச்சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தின்படி, இத்திட்டம் ஜுலை 1 ஆரம்பிக்கப்படவிருப்பதுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 150 பில்லியன் ரூபா வரையறையினுள், சௌபாக்யா கொவிட் – 19 மறுமலர்ச்சி வசதி மற்றும் நாணயச்சட்டத்தின் 83 ஆம் பிரிவின் கீழ் நாணயச்சபையினால் அனுமதியளிக்கப்பட்ட புதிய கடன் வசதிகளுடன் இணைந்ததாக அமுல்படுத்தப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி சிறியளவிலான கடன்களுக்காக 80 சதவீதத்திலிருந்து, ஒப்பீட்டளவில் பாரியளவான கடன்களுக்கு 50 சதவீதம் என்ற வீச்சில் வங்கிகளுக்குக் கொடுகடன் உத்தரவாதத்தை வழங்கும் என்பதுடன், பாதிக்கப்பட்ட வணிகங்களின் தொழிற்பாட்டு மூலதனத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு வங்கிகள் கடன் வழங்கக்கூடிய நிலையினை உருவாக்கும். மேலும் மத்திய வங்கி கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்த சதவீதத்தினை உள்ளீர்ப்பதனால், பிணைகளைக் காட்டிலும் அத்தகைய வியாபாரங்களின் நிச்சயத்தன்மை மற்றும் நிதிப்பாய்ச்சல் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு எளிதில் பாதிப்படையக்கூடிய வியாபாரங்களுக்கு வங்கிகள் அவர்களது கடன்வழங்கலை விஸ்தரித்துக்கொள்ள முடியும்.

வங்கிகள் வியாபாரங்களுக்கு 4 சதவீதத்தில் கடன்களை வழங்குவதற்குத் தங்களுடைய சொந்த நிதியை, குறிப்பாக நோய்த்தொற்றுப் பரவல் காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 300 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்கப்பட்ட நியதி ஒதுக்கு விகிதத்தின்  ஊடாக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட ஏறத்தாழ 180 பில்லியன் ரூபா மேலதிக திரவத்தன்மையினைப் பயன்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியானது ஏனைய வங்கிகளின் நிதியியல் செலவுகளைப் பூர்த்திசெய்வதற்கு 5 சதவீதத்திலான வட்டி உதவுதொகையை வழங்கும்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button