செய்திகள்

புபோனிக்: சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் – என்ன நடக்கிறது அங்கே?

கொரோனா வைரஸின் மையமாக அறியப்பட்ட சீனாவில், தற்போது மீண்டும் ஒரு கொடிய தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம்தான் பன்றிகள் வழியாக மனிதர்களுக்குப் பரவும் புது வகை வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தற்போதைக்கு அந்த வைரஸால் பாதிப்பு இல்லை என்றாலும், அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

புபோனிக் என்ற பிளேக்

இந்நிலையில் சீனாவின் தன்னாட்சி பகுதியான இன்னர் மங்கோலியாவின் உட்பகுதியில் புபோனிக் என்ற பிளேக் தொற்று உறுதியாகியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீன அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மர்மோட்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இன்னர் மங்கோலியாவின் பயனூர் என்ற நகரில் ஆடுகள் மேய்க்கும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை புபோனிக் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த நோயாளிக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்போது அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் சீன அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மோட்டின்

பொதுவாகக் கொறித்து உண்ணும் பழக்கமுடைய விலங்குகளில் ஒன்றான மர்மோட்டின் என்ற விலங்கின் இறைச்சியைப் பச்சையாக உண்பதால் இந்த பாக்டீரியா மனிதர்களுக்குப் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த மர்மோட்டின் இறைச்சி மற்றும் சிறுநீரகத்தை உண்பது உடலுக்கு நல்லது என்ற உள்ளூரில் உள்ளதாக பிபிசியிடம் தெரிவித்தார் மங்கோலிய தலைநகர் உலன்பார்டரில் இருக்கும் உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர். ஆனால் இந்த மர்மோட்டின் விலங்கினத்தை வேட்டையாடக் கூடாது என தடை இருந்தாலும், சிலர் அதனை சட்டவிரோதமாக வேட்டையாடி வருகின்றனர்.

புபோனிக் தொற்றின் தீவிரத்தை நான்கு கட்டங்களாக அதிகாரிகள் அளவிடுகின்றனர். அந்த வகையில் தற்போது மூன்றாம் கட்ட எச்சரிக்கை மக்களுக்கு விடப்பட்டுள்ளது.

சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் - என்ன நடக்கிறது அங்கே?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இந்த புபோனிக் தொற்றானது பாக்டீரியாக்கள் மூலமாக வரக்கூடியவை. இவை மோசமானவை என்றாலும் தற்போதைய அறிவியல் வளர்ச்சியில், இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஆண்டிபயாட்டிக் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

புபோனிக் தொற்றின் அறிகுறிகள் ஃபுளூ காய்ச்சல் போலவே இருக்கும். எனவே இதனை முதலிலேயே கண்டறிவது மிகக் கடினம். இதன் அறிகுறியானது தொற்று ஏற்பட்டு 3 முதல் 7 நாட்களுக்குள் தெரிய வரும்.

புபோனிக் தொற்று கருப்பு மரணம் என அழைக்கப்படுகிறது. கடந்த நூற்றாண்டுகளில் இந்த தொற்று பல கோடி மக்களைக் கொன்று குவித்திருப்பதால் அது இந்த பெயரால் அழைக்கப்படுகிறது

பதினான்காம் நூற்றாண்டு

2017ஆம் ஆண்டு மடகாஸ்கரில் இந்த தொற்றால் 300க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 30க்கும் குறைவானோரே பலியானதாக மருத்துவ சஞ்சிகை லாண்செட் கூறுகிறது.

சீனாவில் அடுத்தடுத்து பரவும் தொற்றுகள் - என்ன நடக்கிறது அங்கே?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

14 -ஆம் நூற்றாண்டில் இந்த நோய் உலகம் முழுக்க பரவி ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் சுமார் ஐந்து கோடி பேரை கொன்று குவித்தது.

1665-ஆம் ஆண்டு லண்டன் நகரை தாக்கிய இந்த நோய், அந்நகரில் வசித்த ஐந்தில் ஒரு பங்கு மக்களைக் கொன்றது. 19 நூற்றாண்டில் சீனா மற்றும் இந்தியாவில் பரவிய இந்த பிளேக் நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும்.

“14ஆம் நூற்றாண்டுபோல இல்லாமல், இந்த நோய் எப்படிப் பரவுகிறது என்பதற்கான புரிதல் நம்மிடம் இப்போது உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்து நமக்கு இப்போது தெரியும். நன்கு செயல்புரியும், நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் நாம் குணப்படுத்தியுள்ளோம்.” என்று ஹெல்த்லைன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார், ஸ்டான்ஃபோர்ட் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், சாந்தி கப்பகோடா.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button