செய்திகள்

லீசிங் கம்பனிகள் தொடர்பில் ஜனாதிபதி பொலிஸாருக்கு விடுத்த உத்தரவு

லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என்பதால் ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

லீசிங் கம்பனிகள் அவ்வாறு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு முன்னர் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதில்லை. அவர்கள் பொலிஸில் முறையிடுவது வாகனத்தை பறிமுதல் செய்ததன் பின்னரேயாகும்.

பலவந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பறிமுதல்கள் சிலபோது பாரதூரமான வன்முறைக்கு காரணமாகின்றது. பறிமுதல் செய்ததன் பின்னர் கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை பொறுப்பேற்க வேண்டாம் என ஜனாதிபதி  பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் – 19 பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு குழுவினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் லீசிங் கடன் தவணையை அறவிடுவதை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 16/2020 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் இரண்டாவது பிரிவில் அது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கடன் தவணை செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

Back to top button