செய்திகள்

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுகிறது – புதிய ஆய்வு எச்சரிக்கை மற்றும் பிற செய்திகள்

8காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று ஓர் உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும்.

காற்று வழியாக தொற்று பரவும் வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் குறைத்து எடைபோட்டுவிட்டதாக 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் ஒன்று அந்த அமைப்பை குற்றம்சாட்டியுள்ளது.

ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

”இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

”இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால், இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா வைரஸ் தொற்று

சயீர் பொல்சனாரூபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. திங்கள் வரை அங்கு 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவருக்கு நேற்று (திங்கட்கிழமை) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு மூன்று முறை பொல்சனாரூவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா?

இந்தியா - சீனாபடத்தின் காப்புரிமைMEA INDIA

இந்திய – சீன எல்லை மோதலுக்குப் பிறகு, அங்கு மீண்டும் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசியில் பேசிய பின்னர் எல்லையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இருநாடுகளும் தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஆனால், இந்தியாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல எல்லையில் படைகளை விலக்குவது அல்லது குறைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் சீனாவின் அறிக்கையில் இடம்பெறவில்லை. அதே போல மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு குறித்து சீனா எதுவும் பேசவில்லை.

டிக் டாக் ஹாங்காங்கில் இருந்து வெளியேறியது

டிக் டாக்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

சமீபத்தில் 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு விதித்த தடையால் இந்தியாவில் இயங்க முடியாத நிலையில் இருக்கும் டிக் டாக் செயலி, ஹாங்காங்கில் தாமாக முன்வந்து இயங்குவதை நிறுத்தியுள்ளது.

ஹாங்காங்கின் மீது அதிகாரத்தைச் செலுத்தும் வகையில் ஒரு புதிய பாதுகாப்பு சட்டத்தைச் சீனா இயற்றியுள்ள நிலையில், அந்த பிராந்தியத்திலிருந்து வெளியேறுவதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button