செய்திகள்

பல்வேறு நிவாரணங்களுடன் ஜனாதிபதியின் புதிய பொருளாதார பொதி..!

கொவிட்-19 காரணமாக பொருளாதார பாதிப்பை குறைப்பதற்காக புதிய பொருளாதார பொதி ஒன்றை ஜனாதிபதி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி, செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களை நிதியமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட முகவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேபோல, மருந்துகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவதற்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர ஒப்பந்தக்காரர்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்துவதற்காக 5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்காக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

மேலும், கூலித் தொழிலாளர்களுக்கான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக ஒரு கிலோ பரிப்பு 65 ரூபா என்ற அதிகூடிய சில்லறை விலையை அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, டின் மீன் ஒன்றின் அதிகூடிய சில்லறை விலை 100 ரூபா எனவும் பெரிய வெங்காயத்திற்கான அதிகூடிய சில்லறை விலை 150 ரூபா எனவும் அமைச்சர் இதன்போது அறிவித்தார்.

இந்த நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக கொரோனா தடுப்பு திட்டத்திற்காக மேலதிகமாக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Back to top button