செய்திகள்

சீனாவில் மீண்டும் கொரோனா வைராஸ்: “போர்க்கால அவசரநிலை” அமல் – என்ன நடக்கிறது அங்கே?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று அந்த நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதாகக் கருதப்படும் நிலையில், அந்த நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பு பிப்ரவரி – மார்ச் மாதத்துக்குப் பிறகு பெரியளவில் அதிகரிக்கவில்லை.

இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 20 நாடுகளில் கூட சீனா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, சீனாவில் இதுவரை 85,000க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது, 4,600 பேர் உயிரிழந்துள்ளனர்

உரும்கியில் என்ன நடக்கிறது?

ஷின்ஜியாங் தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான உரும்கியில் 35 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாகக் கடந்த புதன்கிழமை முதல் உரும்கியில் புதிய நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சீனாவின் மற்ற நகரங்களிலிருந்து உரும்கிக்கும், அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் செல்ல இருந்த கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும், நகர ரயில் சேவையும் முற்றிலும் முடக்கப்பட்டது.

உரும்கியில் இதுவரை புதிதாக 17 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று கூறிய அதிகாரிகள், “ஒட்டுமொத்த நகரமும் போர்க்கால அவசரநிலையை சந்தித்து வருகிறது. அனைத்துவிதமான குழு செயல்பாடுகளும் தடைசெய்யப்படுகின்றன” என்று தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ்

உரும்கியில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள முடக்க நிலை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

 • முதலில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும்; பிறகு அது உரும்கி முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
 • ஒருவர் மற்றொருவரின் வீட்டிற்கு செல்லவும், அதிக எண்ணிக்கையிலானோர் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • அவசர தேவை இருந்தால் மட்டுமே உரும்கி மக்கள் வேறு நகரங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். அதற்கு முன்னர், கட்டாயம் நோய்த்தொற்று பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

  உரும்கியின் தியான்ஷான் மாவட்டத்தில் தொற்று மூலம் கண்டறியப்பட்டதாக நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குநர் ருய் பாலிங் கூறினார். “நோய்த்தொற்று வேகமாக பரவியுள்ளது” என்றாலும், “நிலைமை பொதுவாக கட்டுப்படுத்தக்கூடியது” என்று அவர் கூறினார்.

  இந்த நிலையில், ஷின்ஜியாங் பிராந்தியத்தில் இந்த வாரம் இதுவரை நோய்த்தொற்று அறிகுறியற்ற 23 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 269 பேர் “தீவிர மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.”

  ஷின்ஜியாங் மாகாணமும் சர்ச்சைகளும்

  கொரோனா வைரஸ்

  சீனாவின் இந்த ஷின்ஜியாங் மாகாணத்தில்தான் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தொடர்ந்து பல்வேறு நாடுகளால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

  சமீபத்தில், இந்த மாகாணத்தில் உள்ள வீகர் இன முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டும் சீன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக சில தடையுத்தரவுகளை அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

  வீகர் முஸ்லிம்கள் மற்றும் பிற அமைப்பினருக்கு எதிராக பெரும் அளவிலான தடுப்புக்காவல்கள், மத ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கட்டாய கருத்தடை ஆகியவை நடத்தப்பட்டதாக சீனா மீது குற்றம்சாட்டப்படுகிறது.

  அதேவேளையில், ஷின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் தவறாக நடத்தப்படவில்லை என சீனா மறுத்து வருகிறது.

  எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுவதையும் சீனா மறுத்தது.

  அண்மைக் காலமாக மறுகல்வி முகாம்களில் பல லட்சம் மக்களை சீன அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

  தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தைத் தடுக்க அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button