செய்திகள்

கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா? -வைரஸின் பரிமாண வளர்ச்சி

கோவிட் – 19 நோயில் இருந்து குணாகிவிட்டதாக, அனைத்துப் பரிசோதனைகளிலும் தேறிவிட்டதாகக் கூறப்பட்ட நோயாளிகளில் சிலருக்கு, பின்னர் நடந்த சோதனைகளில் இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவினால், சாதாரண சளியைப் போல நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் இந்த வைரஸ் எப்படி மாறுபட்டது?

70 வயதைக் கடந்த ஆண் ஒருவர் மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப கட்ட உதாரணமாக இருக்கும் நோயாளி. அதிர்ச்சிகரமான, கவலைதரக் கூடிய இந்த விஷயம் அவர் மூலமாகத்தான் மருத்துவர்களுக்குத் தெரிய வந்தது.

அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பரிசோதனையில் கண்டறியப்பட்ட பிறகு கடந்த பிப்ரவரி மாதம் டோக்கியோ மருத்துவமனையில் தனிமை வார்டில் அவர் வைக்கப்பட்டார். ஜப்பானின் செய்தி ஒளிபரப்பு நிறுவனம் என்.எச்.கே. வெளியிட்ட தகவலின்படி, அவர் குணமடைந்து, வீடு திரும்பி இயல்பு வாழ்வைத் தொடங்கிவிட்டார். பொதுப் போக்குவரத்து வசதிகளையும்கூட பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். சில வாரங்கள் கழித்து, அவர் மறுபடி நோயுற்றார், அவருக்குக் காய்ச்சல் வந்தது.

கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

அவர் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். இந்த வைரஸ் பாதிப்பு அவருக்கு இருப்பதாக சோதனையில் தெரிய வந்தது அவருக்கும், மருத்துவர்களுக்கும் அதிர்ச்சி தந்தது.

ஜப்பானில் இந்த நிலையில் இருப்பது அவர் மட்டுமல்ல. கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கிய நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கிறது என்றாலும், கணிசமான எண்ணிக்கையாக உள்ளது. ஏன் இப்படி நடக்கிறது?

வைரஸ் மீண்டும் தாக்குகிறதா

முதலில் கோவிட்-19 பரிசோதனையின் போது, நோய் அறிகுறிகள் இல்லை என அறியப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 14 சதவீதம் பேருக்கு வேறொரு சமயத்தில் நடைபெறும் சோதனையின் போது, நோய் அறிகுறி கண்டறியப்படுகிறது என்று ஸ்பானிய தேசிய பயோடெக்னாலஜி மையத்தின் நச்சுயிரியல் நிபுணர் லூயிஸ் என்ஜுவானெஸ், பிபிசியிடம் கூறியுள்ளார். இது இரண்டாவது தாக்குதல் அல்ல என்றும், வைரஸ் “ முதல் வைரஸ் தொற்றே திருப்பித் தாக்கும்” நிகழ்வு என்றும் அவர் நம்புகிறார்.

கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

“பொதுவாக கொரோனா வைரஸ், மக்களிடம் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குகிறது. ஆனால் சிலருக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிக வலுவாக இல்லை என்பதுதான், மற்ற பல காரணங்களுடன், ஒரு காரணமாக இருக்கும் என்று நான் விளக்கம் அளித்து வருகிறேன்” என்று அவர் கூறுகிறார்.

“அந்த நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது, உடலில் எங்காவது ஒளிந்திருக்கும் அந்த வைரஸ் மீண்டும் மேலே வருகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

உடலில் வைரஸ் ஒளிந்திருக்கலாம்

சில வைரஸ்கள் நம் உடலில் 3 மாதங்கள் அல்லது அதற்கு அதிகமான காலம் ஒளிந்திருக்கும்.

“ஒருவருக்கு பரிசோதனையில் அறிகுறி நிலை பூஜ்யம் என்றோ, அல்லது நெகடிவ் என்றோ வரும்போது, அவருக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகிவிட்டது என்பது அனுமானம். எனவே அந்த வைரஸ் மீண்டும் உருவாகக் கூடாது” என்று என்ஜுவானெஸ் கூறுகிறார்.

“மற்ற உறுப்புகளைப் போல உடலின் தற்காப்பு செயல்பாடுகளுக்கு ஆட்படாத உடலின் சில திசுக்களில், தொற்றுக் கிருமிகள் எங்காவது ஒளிந்திருக்கக் கூடும்.”

ஆனால் ஆய்வாளர்களுக்கு புதிராக இருக்கும் சில விஷயங்கள் கோவிட் – 19ல் உள்ளன. குணமடைந்த பிறகு, மீண்டும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இடைப்பட்ட காலம்தான் புரிந்து கொள்ள முடியாத விஷயமாக உள்ளது.

குழப்பமடைந்த ஆய்வாளர்கள்

வெவ்வேறு நோய்களுக்கு, நோய் எதிர்ப்பாற்றல் வெவ்வேறு மாதிரி செயல்படும் என்பது எங்களுக்குத் தெரியும்.

கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

தட்டம்மைக்கு, குழந்தையாக இருக்கும்போது ஒரு முறை தடுப்பூசி போட்டாலே, வாழ்க்கை முழுக்க நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதாக அது இருக்கும். இருந்தபோதிலும், முதலில் போட்டதைவிட புதிய தடுப்பூசியை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு போட்டுக் கொள்வது பாதுகாப்பானது என்று சில சுகாதார வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படாத சில வைரஸ்கள் இருக்கின்றன. எனவே குறிப்பிட்ட இடைவெளிகளில் நமது மருந்துகளை நாம் அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

சளிக் காய்ச்சல் அல்லது சாதாரண ப்ளூ போன்ற மற்ற தடுப்பூசிகளில், ஆண்டுதோறும் அதைப் போட்டுக் கொள்ள வேண்டும், ஏனெனில் வைரஸ்கள் அடுத்த பரிமாண நிலைக்கு மாறிவிடுகின்றன.

புதிய வைரஸ் – புரிந்துகொள்ள முயற்சி

கோவிட் – 19 புதிய வைரஸ் என்பதால், இரண்டு தொற்றுதல்களுக்கு இடைப்பட்ட காலம் குறுகியதாக இருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள ஆய்வாளர்கள் இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?படத்தின் காப்புரிமை GETTY IMAGES

கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கும் நிகழ்வுகள் நடக்கலாம் என்றாலும், நோய் இல்லை என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு மீண்டும் கோவிட் – 19 தாக்குதல் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மாட்ரிட்டில் உள்ள கார்லோஸ்-III சுகாதார நிலையத்தின் ஆராய்ச்சியாளர் இசிடோரோ மார்ட்டினெஸ் கூறுகிறார்.

“அடுத்த தொற்று பரவல்களின்போது, நோய் எதிர்ப்பாற்றல் நீடித்திருக்காவிட்டால், ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில், உங்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். அது வழக்கமானதுதான்” என்று பிபிசியிடம் மார்ட்டினெஸ் கூறினார்.

“ஆனால் ஒருவிதமான வைரஸ் தாக்குதலில் குணமானவருக்கு, மீண்டும் அதே வகை வைரஸ் தாக்குதல் வருவது அபூர்வமானது. மேலும், நாங்கள் அறிந்த வரையில், ப்ளூ வைரஸ்கள் போல இந்தக் கொரோனா வைரஸ் மாறுவதாகத் தெரியவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்காலிக உயர்வு

அவருடைய விளக்கம் என்ஜுவானெஸ் அளித்த விளக்கம் போலவே உள்ளது.

“கொரோனா தாக்கிய ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்ய்யப்பட்டபின், அவருக்கு மீண்டும் கொரோனா உள்ளது என்று முடிவுகள் வருவது தற்காலிகமாக நோய்த் தொற்று அதிகரிப்பதாக இருக்கக் கூடும்.”

ஆனால் கோவிட் – 19 பற்றி புரிந்து கொள்ள இன்னும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று இருவருமே எச்சரிக்கின்றனர்.

“இந்தப் புதிய கோவிட் – 19 வைரஸ் பற்றி நாங்கள் தினம் தினம் புதிய விஷயங்களை கற்று வருகிறோம்” என்று அமெரிக்க சுகாதார அமைப்பு – PAHO – பிபிசியிடம் கூறினார். எனவே மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகும் நேர்வுகள் பற்றி, நிச்சயமான விளக்கங்களை அளிப்பது சாத்தியமற்றது என்கிறார்.

ஆனால் எந்த வகையான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி முடிவெடுப்பதில் அரசுகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், இதற்கு ஒரு பதிலைக் கண்டுபிடிக்க அறிவியல் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

Back to top button