செய்திகள்

சட்டவிரோதமாக வெளிச்சென்ற மற்றும் உட்பிரவேசித்தவர்கள் குறித்து இராணுவத்தளபதியின் பகிரங்க வேண்டுகோள்

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக வெளியேறி மீளத்திரும்பியோர் மற்றும் உட்பிரவேசித்தோர் தமது விபரங்களை உடன் பதிவு செய்யுமாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸின் ஆபத்தான தன்மையையும் சமுகப்பொறுப்பினையும் கருத்திற் கொண்டு மேற்படி தரப்பினர் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியள்ளார்.

மேலும் வெளிநாட்டிற்கு சென்றமைக்கான காரணம் அல்லது, அங்கிருந்து நாட்டிற்கு திரும்பியமைக்கான காரணம், நாட்டிலிருந்து வெளியேறியமை மற்றும் உட்பிரவேசித்தமை தொடர்பில் எவ்விதமான ஆராய்வுகளும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற அச்சம் காரணமாக தயகத்தில் உள்ளவர்கள் அவற்றை விடுத்து அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேநேரம் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றவர்களும், நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளவர்களும் அச்சத்தின் காரணமாக தொடர்ந்தும் தம்மை மறைத்து முடங்கியுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது வரையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button