செய்திகள்

சூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய உயர் நீதிமன்ற நீதிபதி

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

தி இந்து (ஆங்கிலம்): நீட் குறித்து அறிக்கை – சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி வலியுறுத்தல்

நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழின் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து வேதனை தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் ” நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button