செய்திகள்

நிவர் புயலின் தற்போதைய நிலவரம் என்ன? – 14 முக்கிய தகவல்கள்

வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் பபுயல் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் கரையைக் கடந்துள்ளது.

அது அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. இதன் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது.

நிவர் புயல் பற்றிய 15 முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.

நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தூரத்தில் அதி தீவிர புயலாக கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக புதுச்சேரி, கடலூர், மரக்காணம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

  1. வானிலை மையம் கடைசியாக வெளியிட்ட தகவலின்படி நிவர் புயல் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
  2. அதி தீவிர நிலையில் புயலின் முன்பகுதி கரையை தொட்ட நிலையில், அதன் மையப்பகுதி 2.30 மணிக்கு கரையை அடைந்தபோது தீவிர நிலை ஆக வலுவிழந்தது.
  3. தீவிர புயலாக வலுவிழந்துள்ள நிவர் புயல் மேலும் வலுவிழந்து அடுத்த மூன்று மணிநேரங்களில் சூறாவளியாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை இன்று, வியாழக்கிழமை, காலை 6 மணியளவில் தெரிவித்துள்ளது.
  4. “அமைதியாக இருப்பதால் புயல் கரையை கடந்து விட்டது என்று யாரும் வெளியில் வர வேண்டாம். ஒருவேளை, புயலின் கண் பகுதி கடந்து கொண்டிருக்கலாம். இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருக்கவும்,” என்று தேசிய பேரிடர் மீட்புக் குழு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
  5. அதி தீவிர புயல் நிவர், புதன்கிழமை 11.30 மணி முதல் வியாழக்கிழமை 2.30 மணிக்கு இடையே தீவிர புயலாக வலுவிழந்து முழுமையாக கரையை கடந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று, வியாழக்கிழமை, அதிகாலை தெரிவித்துள்ளார்.
  6. சென்னையில் இன்று காலை 4.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த ஆறு மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவிழக்கும்” என்று அவர் கூறினார்.
  7. இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் வீசக்கூடும். புயல் இன்னும் தமிழக பகுதியிலேயே இருக்கிறது என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
  8. நிவர் புயல் கரையைக் கடக்கும்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் 120 – 130 கிலோ மீட்டர் வரை இருக்கும்; அது அதிகபட்சமாக 145 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது.
  9. ஆனால், நிவர் புயல் கரையைக் கடந்த நேரத்தில் வலுவிழந்ததால் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 20 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகம் வரை இருந்தது.
  10. நிவர் புயல் கரையைக் கடந்தபின், வடமேற்கு திசையில் தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, சேலம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று காலை 6 மணியளவில் தெரிவித்துள்ளது.
  11. நிவர் புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
  12. அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் புதுவையின் காரைக்கால் மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
  13. தமிழகத்தின் சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இன்று மீட்புப்பணிகளுக்காக அரசு பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். இந்த மாவட்டங்களில் அத்தியாவாசிய பணிகள் தொடர்ந்து இயங்கும்.
  14. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடந்த நிலையில் ஆங்காங்கே மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சென்னையிலும் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளன. விழுந்த மரங்கள் அவ்வப்போது அகற்றப்பட்டு வந்தாலும் இன்னும் பல மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்துள்ளன.

இரவு முழுவதும் கடுமையாக மழை பெய்த நிலையில், பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

புதுவையில் சாலையின் குறுக்கே விழுந்திருக்கும் ஒரு மரம்.
படக்குறிப்பு,புதுவையில் சாலையின் குறுக்கே விழுந்திருக்கும் ஒரு மரம்.

புதுச்சேரியில் புயலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. மழை நீர் மட்டுமே நகரின் பல பகுதியில் சூழ்ந்துள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் சாய்ந்து கிடக்கும் ஒரு கம்பம்.
படக்குறிப்பு,சென்னையில் சாய்ந்து கிடக்கும் ஒரு கம்பம்.

ராமேஸ்வரத்தில், புயல் எச்சரிக்கைக் கூண்டு தற்போது இறக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை காலை 8 மணி முதல் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தரமணியிலும் பிறகு வேளச்சேரியிலும் அவர் பார்வையிடுவார். அம்பேத்கர் நகரில் உள்ள நிவாரண முகாமையும் அவர் பார்வையிடுவார்.

நாட்டில் நேற்று 502 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

Back to top button