செய்திகள்

பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க மகாராணி ஒப்புதல்!

ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்குவதற்கு இரண்டாம் எலிசபெத் மகாராணி ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பிக்கள் எதிர்ப்பு காரணமாக, பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒப்டோபர் மாதம் 13 ஆம் தினதி வரை ஒத்தி வைக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் திட்டமிட்டிருந்தார்.

அத்துடன் இது தொடர்பில் அனுமதி வழங்குமாறும் எலிசபெத் மகாராணியிடம் அவர் கோரியிருந்தார். இந் நிலையிலேயே மகாராணி, செப்டம்பர் 9 முதல் 12 வரையிலும் மற்றும் அதைத்தொடர்ந்து ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையிலும் பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்திருந்தது. இந்த விவகாரத்தை ‘பிரெக்ஸிட்’ என்று அழைத்து வந்தனர்.

ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக பாராளுமன்றத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்று முறை தோல்வி அடைந்தது.

ஆளும் பழமைவாதக் கட்சி (கன்சர்வேடிவ்) உறுப்பினர்களே தெரசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தெரசா மே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சில அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியின் தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை கடந்த ஜூன் மாதம் 7 ஆம் திகதி ராஜினாமா செய்தார் தெரசா மே.

இதனைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜோன்சன் பிரிட்டன் பிரதமராக ஜூலை மாதம் பதவி ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்றதும் இன்னும் 3 மாதங்களுக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து எதிர்மறைக் கருத்தைத் தெரிவிப்பவர்கள், சந்தேகிப்பவர்களின் கூற்றைத் தவறு என்று நிரூபிப்பேன் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Back to top button