செய்திகள்

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தை அமர்த்துவதே ஒரேவழி : வர்த்தமானி அறிவிப்பு குறித்து ஜனாதிபதி விளக்கம்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுத படைகளை கடமையில் அமர்த்த நடவடிக்கை எடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பதாக வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் மக்களை அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்று வழிமுறை இல்லையென ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

“கொவிட் -19” கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக அதிக இடர்பாடுகளை அரசாங்கம் சந்தித்து வருகின்ற நிலையில் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முடியாதிருக்க பிரதான காரணம் மக்களின் அனாவசிய செயற்பாடுகள் என்பதை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் மத்தியில் அமைதியை பேணுவதற்காக வழமையாக படையினரை ஈடுபடுத்துவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை மேலும் ஒருமாத காலம் நீட்டிக்கும் மற்றொரு வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஆயுத படைகளை கடமையில் அமர்த்தவும் அவர் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(40 ஆம் அத்தியாயம்) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று  (22.04.2020) நள்ளிரவு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது இது குறித்த தெளிவுபடுத்தலை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவல் அதிகரிக்க மக்களின் அனாவசிய செயற்பாடுகளே காரணமாகும், வெளி மாவட்டங்களிலும் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு தளர்க்கப்பட்டமையானது மக்கள் அனாவசியமாக வெளியில் திருவதற்கோ, அனாவசிய செயற்பாடுகளில் ஈடுபடவோ அல்ல. ஆகவே இராணுவத்தை கொண்டு மக்களை ஓரளவு கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனாவசியமாக நடமாடுவதை தடுத்து மக்களை கட்டுப்படுத்த இருக்கும் ஒரே வழிமுறையை கையாள நேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Back to top button