செய்திகள்

புவி வெப்பமயம்: “துருவ பகுதியில் உருகும் பனி – ஆந்த்ராக்ஸ் பரவலாம், அணுக்கழிவு வெளியாகலாம்”

2012ஆம் ஆண்டில் சூ நட்டாலி, சைபீரியாவின் டுவன்னவ் யர் பகுதிக்கு முதல்முறையாகச் சென்றார். பருவநிலை மாற்றத்தால் உறைபனி உருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவியாக அவர் சென்றார். அந்த இடத்தின் புகைப்படங்களைப் பல முறை அவர் பார்த்திருக்கிறார். டுவன்னவ் யர் பகுதியில் வேகமாக பனி உருகும் காரணத்தால், பெரிய அளவில் நிலச் சரிவுகள் ஏற்பட்டன.

சைபீரியாவில் மரங்கள் இல்லாத பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன. ஆனால் நேரடியாக சென்று பார்ப்பதற்கு உந்துதலை ஏற்படுத்தவில்லை.

“அது வியப்புக்குரியது, உண்மையில் வியப்பானதாக உள்ளது” என்று அவர் என்னிடம் கூறினார். மசாசூசெட்ஸ் நகரில் அசோசியேட் விஞ்ஞானியாகப் பணிபுரியும் உட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து அவர் என்னுடன் பேசினார்.

“அதுபற்றி நினைத்தால் இப்போதும் எனக்கு சில்லிடுகிறது. அதன் பிரமாண்டத்தை என்னால் நம்ப முடியவில்லை: பல அடுக்கு மாடி கட்டடத்தின் அளவிற்கு பெரிய அளவில் பனிமலையின் முகடுகள் சரிந்து விழுவது… நீங்கள் நடந்து செல்லும்போது பனியின் நடுவே ஏதோ கட்டைகள் நீட்டிக் கொண்டிருப்பது போல தோன்றும். ஆனால் அவை கட்டைகள் கிடையாது. பெரிய உயிரினங்கள் மற்றும் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்குகளின் எலும்புகள்” என்று அவர் கூறினார்.

வேகமாக சூடாகிக் கொண்டிருக்கும் துருவ பகுதியில் வேகமாக ஏற்படும் பாதிப்புகள், தெளிவாகத் தெரிகின்றன என்பதை அவருடைய விவரிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

காலம் காலமாக உறைந்த நிலையில் இருந்த அந்தப் பகுதிகள் இப்போது உருகத் தொடங்கியுள்ளன. தன்னுள் மறைத்து வைத்திருந்த ரகசியங்களை அவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினங்களின் படிமங்களுடன், கார்பன் மற்றும் மீத்தேன் வெளியாதல், நச்சுத்தன்மையான பாதரசம், பழங்கால நோய்களும் வெளியே வரத் தொடங்கியுள்ளன.

இயற்கை ரகசியங்கள் நிறைந்த உறைபனியில் சுமார் 1,500 பில்லியன் டன்கள் அளவுக்கு கார்பன் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

“காற்று மண்டலத்தில் இருக்கும் கார்பனைவிட இது இரண்டு மடங்கு அதிகம். உலகில் எல்லா வனப் பகுதிகளிலும் சேர்ந்துள்ள கார்பனைவிட, இது மூன்று மடங்கு அதிகம்” என்று நட்டாலி கூறுகிறார்.

2100 ஆம் ஆண்டுக்குள் இந்த உறைபனியில் 30 முதல் 70 சதவீதம் வரையில் உருகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நாம் எவ்வளவு சிறப்பாக நடவடிக்கைகள் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து இது மாறுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இப்போதுள்ள நிலையில் போனால் 70 சதவீதம் என்பது தானாக நடக்கும். தொடர்ந்து பெட்ரோலிய பொருட்களை எரித்தால் இந்த அளவுக்கு உருகும். பெட்ரோலியப் பொருட்களால் புகை உருவாதலைக் குறைத்தால் 30 சதவீதம் அளவுக்கு குறைக்க முடியும். 30 – 70 சதவீதம் உருகும்போது, அதனுள் சிக்கியிருக்கும் கார்பன் நுண்பகுதிகளாக உடையும். அது எரிபொருள் அல்லது எரிசக்தியாக செலவாகி, கரியமில வாயு அல்லது மீத்தேன் வாயுவாக வெளியாகும்” என்று நட்டாலி விவரித்தார்.

உருகுவதால் வெளியாகும் 10 சதவீத கார்பன் கரியமில வாயுவாக வெளியேறும். இதன் அளவு 130 முதல் 150 பில்லியன் டன்கள் வரை இருக்கும். அமெரிக்காவில் இப்போதைய அளவில் 2100 ஆம் ஆண்டு வரையில் வெளியாகக் கூடிய கரியமில வாயுவின் அளவுக்குச் சமமானதாக இது இருக்கும்.

உறைபனி அதிகம் உருகும்போது, அதிக அளவில் கார்பன் உற்பத்தி செய்யும் பட்டியலில் புதியதாக ஒரு நாடு இரண்டாவது இடத்திற்கு வரும். இப்போது ஐ.பி.சி.சி. மாடல்களில் அந்த நாடு கணக்கில் கொள்ளப்படவே இல்லை,

ஆனால் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் நிலை உருவாகிவிடும். “கார்பன் வெடிகுண்டு என்பது பற்றி மக்கள் பேசுகிறார்கள்” என்கிறார் நட்டாலி. “பூகோள காலக்கணிப்பின்படி பார்த்தால், இது மெதுவாக வெளிப்படுதல் கிடையாது. இது பனிக்குள் அடைபட்டிருக்கும் கார்பன். வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவதற்கான கார்பன் பட்ஜெட்டில் இது கணக்கில் கொள்ளப்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

வடக்கு கோளத்தில் 2018/2019 பனிக்காலத்தில் “துருவப் பகுதி சுழல்காற்று” குறித்த தலைப்புச் செய்திகள் அதிகம் இடம் பெற்றன. வட அமெரிக்காவில் தென் பகுதியில் வழக்கத்தைவிட வெப்ப நிலை குறைந்தது. இண்டியானா செளத் பென்ட்டில், 2019 ஜனவரியில் வெப்பநிலை மைனஸ் 29 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் போனது. அது 1936-ல் அங்கு பதிவான குறைந்தபட்ச அளவைவிட இரண்டு மடங்கு குறைவு. வடக்கில் துருவ வட்டத்துக்கு அப்பால் இதற்கு நேர் மாறான நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ஜனவரியில் துருவப்பகுதி கடல் பனி சராசரியாக 13.56 மில்லியன் சதுர கிலோ மீட்டர் மட்டுமே இருந்தது. 1981 முதல் 2010 வரையிலான நீண்டகால சராசரியைவிட சுமார் 8,60,000 சதுர கிலோமீட்டர் குறைந்திருந்தது. 2018 ஜனவரியில் இருந்த குறைந்தபட்ச அளவைக் காட்டிலும் இது சற்று அதிகம்.

நவம்பரில் வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்க வேண்டும். வடக்கு துருவத்தில் பதிவான உறைநிலையைவிட இது 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம். உலகின் மற்ற பகுதிகளைவிட துருவப் பகுதியில் இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. (சூரிய சக்தி பிரதிபலிப்பு இழப்பு ஓரளவுக்கு காரணமாக இருக்கிறது.)

“உறைபனி உருகுவது பெரிய அளவில் அதிகரிப்பதை நாம் காண்கிறோம்” என்று என்.ஓ.ஏ.ஏ. துருவப்பகுதி ஆராய்ச்சித் திட்ட மேலாளர் எமிலி ஆஸ்போர்ன் உறுதி செய்கிறார். துருவப் பகுதி சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்து வருடம் தோறும் வெளியாகும் துருவ பகுதி ரிப்போர்ட் கார்ட் இதழின் ஆசிரியராகவும் இவர் இருக்கிறார். காற்றுவெளி வெப்பம் அதிகரிப்பதால், உறைபனி உருகுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். “இதன் விளைவாக நிலப்பகுதி சரிகிறது. நிலைமைகள் வெகு வேகமாக மாறுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்திராத அளவில் இவை நிகழ்கின்றன” என்று அவர் கூறுகிறார்.

2017ஆம் ஆண்டு துருவ பகுதி அறிக்கையின் தலைப்புச் செய்தி கடுமையாக இருந்தது: “துருவப்பகுதி மீண்டும் உறைபனி சூழலுக்கு மாறுவதற்கான அறிகுறி தென்படவில்லை” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

நார்வேயில் ஸ்வல்பார்டு பல்கலைக்கழக மையத்தில் கல்விப் பிரிவு துணை டீனாக இருக்கும் பேராசிரியர் ஹன்னே கிறிஸ்டியன்சென் உடன் இணைந்து எழுதிய கட்டுரையில் 20 மீட்டர் ஆழத்தில் உறைபனி குறித்து ஆய்வு செய்தது (குறுகியகால பருவநிலை மாறுபாடுகளால் அவ்வளவு சீக்கிரத்தில் பாதிப்பு ஏற்படாது என கருதப்படும் அளவுக்கு இது ஆழமானது) பற்றி கூறப்பட்டுள்ளது.

2000வது ஆண்டுக்குப் பிறகு அந்த ஆழத்தில் வெப்பநிலை 0.7 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருப்பதாகத் தெரிய வந்தது என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச உறைபனி சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் கிறிஸ்டியன்சென், “உறைபனியின் உள்பகுதியில் கணிசமான வேகத்தில் வெப்பம் உயர்ந்து கொண்டிருக்கிறது.

முன்பு நிரந்தரமாக உறைந்து கிடந்தவை எல்லாம் இனிமேல் விடுபட்டு வெளியே வரும்” என்று என்னிடம் கூறினார். 2016-ல் ஸ்வல்பார்டில் இளவேனில் வெப்ப நிலை நவம்பர் முழுக்க பூஜ்ஜியம் டிகிரிக்கும் அதிகமாக இருந்தது.

“1898ல் இருந்து பதிவாகியுள்ள வரலாற்றில் இல்லாத அளவாக இது இருந்தது” என்கிறார் கிறிஸ்டியன்சென் தெரிவித்தார். “அப்போது அதிக அளவு மழை பெய்தது. அப்போது பனிமூட்டம் ஏற்பட்டது. பல நூறு மீட்டர்களுக்கு மண் சரிவு ஏற்பட்டது. சில பகுதி மக்களை நாங்கள் வெளியே அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று” என்றும் அவர் கூறினார்.

வட அமெரிக்கா உறைபனி மலைகள் உருகுவதில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றம் எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

“அலாஸ்காவில் துருவப்பகுதியில் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட நிலம் மற்றும் ஏரிகள் மீது நீங்கள் பறந்து செல்லலாம்” என்று நட்டாலி கூறுகிறார். அவருடைய கள ஆய்வு சைபீரியாவில் இருந்து அலாஸ்காவிற்கு மாறியுள்ளது.

“மேற்பரப்பில் கிடைத்த தண்னீர் இப்போது குளம் போல கீழே இறங்கிவிட்டது” என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றில் பல குளங்களில் மீத்தேன் குமிழ்கள் ஏற்படுகின்றன. பழங்கால நுண்கிருமிகளுக்கு சாப்பிட ஏதோ கிடைத்ததால் திடீரென அவை செயல்படத் தொடங்கி, உப பொருளாக மீத்தேனை விடுவிக்கின்றன.

“பல சமயங்களில் நாங்கள் ஏரியின் குறுக்கே நடந்து செல்ல முடிந்தது. அது மணற்பாங்காக இருந்தது. சில இடங்களில் சூடான தொட்டி போல இருந்தது. அங்கே குமிழ்கள் கிடையாது” என்று நட்டாலி தெரிவித்தார்.

சைபீரியாவில் உறைபனி உருகும்போது ஆந்த்ராக்ஸ் கிருமி வெளியானது
படக்குறிப்பு,சைபீரியாவில் உறைபனி உருகும்போது ஆந்த்ராக்ஸ் கிருமி வெளியானது

ஆனால், மீத்தேனும் கரியமில வாயுவும் மட்டும் தான் வெளியாகும் என்று சொல்ல முடியாது. 2016 கோடையில், கலைமான் கூட்டங்களைப் பராமரிக்கம் மலைவாழ் மக்களுக்கு புதிரான ஒரு நோய் ஏற்பட்டது.

சைபீரியாவில் கடைசியாக 1941-ல் காணப்பட்ட “சைபீரிய பிளேக்” நோயாக இருக்கலாம் என்று பலர் கூறினர். ஒரு சிறுவனும், 2,500 கலைமான்களும் இறந்தபோது, அது ஆந்த்ராக்ஸ் என்று கண்டறியப்பட்டது. பனிப்பாறையில் இருந்து வெளியான கலைமான் உடலில் இருந்து அந்த நோய் பரவியுள்ளது.

75 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்த்ராக்ஸ் பாதிப்பால் அந்த கலைமான் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. “ஸ்வைன் ஃப்ளூ, பெரியம்மை அல்லது பிளேக் போன்ற ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்ட நோய்கள், இந்த பனிப்பாறைகளுக்குள் உறைந்து கிடக்கலாம்” என்று 2018 துருவப்பகுதி ரிப்போர்ட் கார்டில் கூறப்பட்டுள்ளது.

2014-ல் பிரெஞ்சு நிபுணர்கள் நடத்திய ஆய்வில் பனிப் பாறைக்குள் உறைந்து கிடந்த, 30 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வைரஸ் எடுக்கப்பட்டது. அதை ஆய்வக சூழலில் வைத்து இதமாக சூடுபடுத்தினர். 300 நூற்றாண்டுகள் கழித்து அவை உயிர் பெற்றன.

பல மில்லியன் பயிர் விதைகளைப் பத்திரமாகக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நார்வே துருவப் பகுதியில் உள்ள துணை மையமான டூம்ஸ்டே வால்ட் வளாகம் 2016-ல், பனி உருகியதால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் உறைபனிக்கான தி குளோபல் டெரஸ்ட்ரியல் நெட்வொர்க்கில் ஸ்வீடன் அணு கழிவு மேலாண்மை திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. அது நிரந்தரமாக இருக்கும் உறைபனியை நம்பியதாக உருவாக்கப் பட்டுள்ளது. (இதுகுறித்து கருத்தறிய அவர்களை BBC Future தொடர்பு கொண்டபோது, அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்)

அதிக காலம் பத்திரமாக பராமரிக்கப்பட்ட மனிதன் குறித்த தொல்லியல் வளாகம் சீக்கிரம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கிரீன்லாந்தில் உறைபனியில் கண்டுபிடிக்கப்பட்ட பேலியோ-எஸ்கிமோ தளம் சுமார் 4,000 ஆண்டுகளாக பராமரிப்பில் உள்ளது.

இப்போது அது நீரில் அடித்துச் செல்லப்படும் ஆபத்து உள்ளது. பனிப்பாறைகளில் பத்திரமாக இருந்த சுமார் 180,000 தொல்லியல் தளங்களில் ஒன்று தான் இது. அதில் உள்ள மென்திசுக்களும், ஆடைகளும் ஆச்சர்யம் தரும் வகையில் அப்படியே உள்ளன. ஆனால் வெளிக்காற்று பட்டால் கெட்டுவிடும்.

அக்கறையுள்ள விஞ்ஞானிகளின் யூனியனை சேர்ந்த ஆடம் மார்க்கம், “மனிதர்களால் உருவாக்கப்படும் பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருவதால், பனிப் பாறைகளில் உள்ள பல இடங்கள் அல்லது கலை முக்கியத்துவமான தளங்களை, நாம் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே அவை அழிந்து போகும்” என்று கூறியுள்ளார்.

நவீன காலத்து மனித ஏற்படுத்திய சிதைவுகள் கெட்டுப் போகாது: கடல்வள மைக்ரோபிளாடிக் இந்த வகையில் வரும். உலக அளவில் கடல்வள சுழல் நீரோட்டம் காரமமாக, நிறைய பிளாஸ்டிக் கழிவுகள் துருவப் பகுதியில் ஒதுங்கி, கடல் பனியில் உறைந்துவிடுகின்றன அல்லது பனிப்பாறையில் உறைந்துவிடுகின்றன.

கடல்வாழ் நுண் துகள்கள் பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. உலகில் மற்ற கடல் முகத்துவாரங்களைக் காட்டிலும், துருவப் பகுதி முகத்துவாரங்களில் கழிவுகள் ஒதுங்குவது அதிகமாக இருப்பது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. கிரீன்லாந்து கடலில் மைக்ரோ பிளாஸ்டிக் கழிவு சேருவது 2004 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. “ஒட்டுமொத்த பெருங்கடலில் இருந்து ஒதுங்கும் அந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் துருவப் பகுதியில் குப்பையாகச் சேருகின்றன” என்று ஆஸ்போர்ன் கூறுகிறார்.

“இதை ஒரு பிரச்னையாக முன்பு நாங்கள் கருதவில்லை. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் எப்படிப்பட்டதாக இருக்கும், இதை சாப்பிட்டு பிறந்த மீன்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும், அந்த மீன்களை சாப்பிடுவதன் மூலம் நாம் அந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகளை சாப்பிடுகிறோமா என்பது பற்றிய விஷயங்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

பல மில்லியன் பயர்களின் விதைகளைப் பாதுகாத்து வந்த, நார்வே துருவப் பகுதியில் உள்ள டூம்ஸ்டே வால்ட் என்ற ஆய்வகம், 2016 ஆம் ஆண்டில் பனி உருகிய நீரில் மூழ்கியது.
படக்குறிப்பு,பல மில்லியன் பயர்களின் விதைகளைப் பாதுகாத்து வந்த, நார்வே துருவப் பகுதியில் உள்ள டூம்ஸ்டே வால்ட் என்ற ஆய்வகம், 2016 ஆம் ஆண்டில் பனி உருகிய நீரில் மூழ்கியது.

உணவு சங்கிலி மூலம் பாதரசமும் சேர்ந்து, பனி உருகும் போது வெளியில் வருகிறது. பூமியில் உள்ள பாதரசத்தில் அதிக அளவு பாதரசம் துருவப் பகுதியில் தான் இருக்கிறது. துருவப் பகுதி பனிமலைகளில் சுமார் 1,656,000 டன் பாதரசம் சிக்கி உறைந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது; பூமியில் மண், கடல் மற்றும் வான்வெளியில் உள்ள மொத்த பாதரசத்தைவிட இது சுமார் 2 மடங்கு அதிகம்.

“உயிரிகள் உள்ள சூழலில் பாதரசம் நன்கு பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும். உயிரிகள் பாதரசத்தை நீக்குவது கிடையாது என்பதால் உணவு சங்கிலியில் அது சேர்ந்து கொள்கிறது. உறைபனிக்குள் நிறைய பாதசரம் சேமிப்பாக இருக்கும். அது உருகும்போது சதுப்பு நிலப் பகுதியில் வெளியாகும். உயிரிகளுக்கு உகந்த இடமாக அது இருக்கிறது. அங்கிருந்து உணவு சங்கிலியில் பாதரசம் சேர்ந்து கொள்கிறது. அது வனவிலங்குகள், மனிதர்கள் மற்றும் வணிக ரீதியிலான மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று நட்டாலி விளக்குகிறார்.

துருவப் பகுதியில் பனி உருகுவதால் நல்ல விஷயம் ஏதாவது இருக்கிறதா? பசுமையான துருவப் பகுதியில் நிறைய மரங்கள் வளர்ந்து, காய்கறிகள் வளர்ந்து, விலங்குகளுக்கு புதிய மேய்ச்சல் நிலங்கள் உருவாகுமா? “துருவப் பகுதி பசுமையாக மாறுகிறது” என்பதை ஆஸ்போர்ன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், “மித வெப்பமான சூழலில் வைரஸ்கள் மற்றும் நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. அதனால் நிறைய கலைமான்கள் நோய்க்கு ஆளாகின்றன. அந்த மிதவெப்ப சூழ்நிலை உயிர்வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கிறது என்பதாக மட்டுமின்றி, நோய்களை உருவாக்குவதாகவும் இருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

பல பகுதிகளில் “பயிர்கள் இல்லாத காலியிடங்கள் பிரவுனாதல்” பாதிப்பு ஏற்படுகிறது என்று நட்டாலி கூறுகிறார். வெப்பம் அதிகமாக இருப்பதால் தரைப்பகுதி தண்ணீர் ஆவியாகிறது. அதனால் பயிர்கள் இறந்து போகின்றன. நிலச்சரிவு காரணமாக மற்ற பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. “அது 2100 அல்லது 2050-ல் நடக்காது. இப்போதே நடக்கிறது. `வழக்கமாக அங்கே நாங்கள் புளூபெரி சேகரிப்போம். இப்போது பாருங்கள் அது சதுப்புநிலமாகிவிட்டது’ என்று மக்கள் கூறுகிறார்கள்” என்று நட்டாலி தெரிவித்தார்.

உரையாடலை அவநம்பிக்கையுடன் முடிக்க நட்டாலி விரும்பவில்லை. நாம் நிறைய செய்ய முடியும் என்கிறார் அவர். துருவப் பகுதியில் நடக்கும் நிகழ்வுகள் நிச்சயிக்கப்பட்டவை கிடையாது. “சர்வதேச சமுதாயத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எவ்வளவு கார்பன் விடுபடும், எவ்வளவு பனி உருகும் என்பதை நமது செயல்பாடுகள் முடிவு செய்யும். முடிந்தவரை அதிகமான பனிமலைகள் உருகாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் நம்மால் ஓரளவுக்கு கட்டுப்பாடு செலுத்த முடியும்” என்று அவர் கூறினார். நமது கார்பன் உற்பத்தி “வழக்கம் போல” இருக்கக் கூடாது. துருவப் பகுதி அதைச் சார்ந்ததாக இருக்கிறது. நாமும் துருவப் பகுதியைச் சார்ந்திருக்கிறோம்.

Source : BBC Tamil

Back to top button