செய்திகள்

ஒரு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய 4 பேர்: குலுக்கல் முறையில் மணமகன் தேர்வு

உத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில், பெண்ணொருவரை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பியதாகவும் இதனால் அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஊரை விட்டு தப்பி சென்றார். மீண்டும் அப்பெண்ணை கிராமத்திற்கு அழைத்து வந்த ஊர்க்காரர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டி அந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று குலுக்கல் முறையில் சீட்டு போட்டு தேர்வு செய்துள்ளனர்.

அசிம் நகரை சேர்ந்த 4 இளைஞர்களும் அருகாமையில் உள்ள தண்டா போலீஸ் நிலைய எல்லையைச் சேர்ந்த அந்தப் பெண்ணை காதலித்துள்ளனர். 4 பேரும் அந்த பெண்ணுடன் அவர்களின் கிராமத்திற்கு வந்து, இரண்டு நாட்களுக்கு அப்பெண்ணை தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே தங்கள் மகளை காணாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவரின் பெற்றோர்கள் முயற்சித்த போது இளைஞர்களின் கிராமத்தினர் அவர்களை தடுத்துள்ளனர்.

இதற்கிடையே கிராம மக்கள் அந்த 4 இளைஞர்களிடமும் தனித்தனியாக பேசி யாராவது ஒருவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக இளைஞர்களிடம் பேசியும் யாரும் ஒருமித்த கருத்து ஒற்றுமைக்கு வராமல் இருந்துள்ளனர். மேலும் யாராவது ஒரு இளைஞரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண்ணிடம் ஊர்மக்கள் பேசிய போதும் அவரும் யாரையும் தேர்வு செய்யவில்லை,

இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் பெண் எந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சீட்டு குலுக்கி போட்டு முடிவு செய்து கொள்ளலாம் என பஞ்சாயத்தார் ஒரு முடிவுக்கு வந்தனர். இதற்கு அனைத்து தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து 4 இளைஞர்களின் பெயரையும் எழுதி மடித்து ஒரு குவளையில் போட்டனர். பின்னர் அக்கிராமத்தில் இருந்த சிறுவன் ஒருவனை அதில் இருந்து சீட்டு எடுக்குமாறு அவர்கள் கூறியதன் பேரில் அதில் ஒரு இளைஞர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Back to top button