செய்திகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?

இலங்கையில் எதிர்வரும் 16ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில், 35 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்பில் நாட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

நாட்டை ஆட்சி செய்யும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாஸவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் களமிறங்கியுள்ளனர்.

இந்த இரண்டு வேட்பாளர்களும் தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில், அந்த தேர்தல் அறிக்கைகள் ஊடாக தமிழர்களுக்கு என்று சில தீர்வுகள் மற்றும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள், தமது தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியுள்ளன.

அத்துடன், இரண்டு தரப்பினரும் இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்றின் அவசியத்தை வெவ்வெறு விதத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து முன்னோக்கி நகர்வோம் என சஜித் பிரேமதாஸ கூறியுள்ள அதேவேளை, 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோம் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஐபக்ஷபடத்தின் காப்புரிமை GETTY IMAGES

கிராமிய பொருளாதாரம், புத்தாக்கம், முயற்சியாண்மை, நவீன தொழில்நுட்பம், உயர்கல்வி, முன்பள்ளி, சமூக சமச்சீரான பொருளாதாரம், பெண்களுக்கு முன்னுரிமை, ஊழல் – மோசடியற்ற ஆட்சி, அடிப்படைவாதத்திற்கு எதிரான போர், போட்டிமிக்க உலக மற்றும் உள்நாட்டு சந்தையை உருவாக்கல், போதைப்பொருளுக்கு எதிராக கடும் சட்டம், இலங்கைக்கு முன்னுரிமை, இலங்கையின் அமைவிடம், சட்டவாட்சி, சுதந்திரமான ஊடகத்துறை, வினைத்திறன் வாய்ந்த பொதுச் சேவை, போக்குவரத்து, சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு, நட்புறவுடனான வெளிநாட்டுக் கொள்கை, ஊழல் – மோசடியற்ற அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு மீள்திருத்தம், மாற்றம் கொண்ட பிரஜை – வளமான மனித வளம், மக்களை மையப்படுத்திய பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப விருத்தி, பௌதீக வள அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம், சட்டத்தினை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்து.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் (வலது)படத்தின் காப்புரிமை GETTY IMAGES பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சஜித் பிரேமதாஸ (வலது)

இந்த இருவரும் தமிழர்களுக்கு என்று அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தமிழர்களுக்கான திட்டங்கள்

01. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் நுண்கடனினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தின் தலையீட்டில் கடன் மற்றும் விவசாயக் கடனை பெற்றுக்கொடுத்தல்.

02. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அவர்களது வாழ்க்கையை சரியான முறையில் கொண்டு செல்வதற்கான முதலீடுகளை மேற்கொள்ளுதல்.

03. மனிதாபிமான நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்குதல்.

04. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

05. மேலதிக வருமானங்களை பெற்றுக்கொள்வதற்காக பாவனைக்கு உட்படுத்தாதுள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்காக வழிவகைகள் செய்யப்படும்.

06. பெருந்தோட்டங்களில் மேலதிக கணித, விஞ்ஞானப் பாடசாலைகள் உருவாக்கப்படும்.

07. சகல வசதிகளுடனும் கூடிய குறைந்த மாடி வீடுத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் .

08. கர்ப்பணி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை பெற்றுக்கொடுக்க புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்.

09. மலையக இளைஞர்களின் தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான பல்கலைகழக சபைபொன்று ஹட்டனில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் நிறுவப்படும்.

10. மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும் என்பதுடன், தோட்டத்துறையை மையப்படுத்திய கைத்தொழில் வலயமொன்றை நிறுவ நடவடிக்கையெடுத்தல்.

11. தோட்டத்துறையை அபிவிருத்தி செய்ய சிறந்த முகாமைத்துவ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும்.

12. இவரின் வாக்குறுதியில் மலையக புத்திஜீவிகளின் நீண்டகால கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழகம் குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை.

13. வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

14. பெரிய மற்றும் நடுத்தர விவசாயங்களை மேற்கொள்வதற்காக அரசாங்கத்தின் காணிகளை குத்தகைக்கு வழங்குவதுடன், விவசாயிகளுக்கு விவசாயங்களை மேற்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்படும்.

15. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர்களுக்கு அதே மாகாணத்தில் அரச வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

16. வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலீஸ் சேவைக்கு ஆட்கள் இணைத்துக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில், தமிழ் மொழி அறிவு குறித்து கவனம் செலுத்தப்படும்.

17. குறித்த இரண்டு மாகாணங்களிலும் விவசாய பொருட்களை சேகரிப்பதற்கான பொருளாதார வலயங்களை நிறுவுதல்.

மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். (கோப்புப்படம்)

சஜித் பிரேமதாஸவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தமிழர்களுக்கான திட்டங்கள்

1. தோட்டத் தமிழ் விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க அவுட் – க்ரோவர் திட்டம் குறித்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பொறிமுறை.

2. தோட்டப் பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள்

3. கௌரவம், சமத்தும், அபிவிருத்தி, பொருளாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

4. தொழில்துறை மற்றும் சேவைத்துறைக்கு மலையக இளைஞர்கள் உள்ளீர்ப்பு

5. 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும்.

6. நியாயமான மற்றும் சமமான சம்பள அதிகரிப்பு

7. பெருந்தோட்ட சுகாதாரமானது ஏனைய பகுதிகளை போன்று தரமுயர்த்தப்படும்.

Sajith Premadasa

8. உயர் கல்வியை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகம் திறக்கப்படும்.

9. நாடு முழுவதும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விசேட செயல் திட்டம்.

10. மலையக இளைஞர்களுக்கான தொழில் பயிற்சியை உறுதிப்படுத்தல் உள்ளிட்டவை மலையக மக்களுக்கான உறுதிமொழிகளாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

11. மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி

12. தொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.

13. தோட்டத்தொழிலாளர்களுக்கு ரூ.1500 நாளாந்த சம்பளம்.

14. நீண்டகால இடம்பெயர்வுகளினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் வணிக மறுசீரமைப்பு ஆகியன மேற்கொள்ளப்படும்.

15. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் முயற்சி.

16. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசு பொறுப்பு கூற கோரி வவுனியாவில் பேரணி
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசு பொறுப்பு கூற கோரி வவுனியாவில் 2017இல் நடந்த போராட்டம் (கோப்புப்படம்)

17. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குதல்.

18. இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது.

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான திட்டங்கள் பல வெவ்வேறு விதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இரு வேட்பாளர்களும் பெரும்பாலும் ஒரே எண்ணத்திலான திட்டங்களையே முன்வைத்துள்ளமையை காண முடிகின்றது.

இந்த நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் இணைந்து 13 நிபந்தனைகளை வெளியிட்ட போதிலும், இந்த இரண்டு வேட்பாளர்களும் தமது தேர்தல் அறிக்கைகளில் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் நிபந்தனைகளை உள்வாங்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிற செய்திகள்:

இலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள் – என்ன செய்யப் போகின்றன?

காணாமல் போனோர், அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு 2 வருடங்களுக்குள் தீர்வு : நாமல்

நவம்பர் மாத ராசிபலன்…. அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டப்போறது எந்த ராசிக்கு தெரியுமா?

Back to top button