செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பு: புதிய கட்சி குறித்து அறிவிப்பா? – விரிவான தகவல்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: “நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர் சந்திப்பு: புதிய கட்சி குறித்து அறிவிப்பா?”

தனது அரசியல் நிலை குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று(வியாழக்கிழமை)தெரிவிக்கிறார். முன்னதாக அவர் மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

1996-ம் ஆண்டு முதல் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் அவருடைய ரசிகர்கள் மிக தீவிரமான ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இதுபற்றி ரஜினிகாந்த் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி நடைபெற்ற ரசிகர் மன்ற கூட்டத்தில், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை அறிவித்தார்.

ரஜினிகாந்த் அரசியல் பேச்சுக்கு பின்னர் அவரது ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. பின்னர் அரசியல் கட்சிகளை போன்று ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் தமிழக மக்கள் நிகழ்த்தப்போகிறார்கள்’ என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த 5-ந்தேதி, சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் மிக வெளிப்படையாக மாவட்ட செயலாளர்களிடம் பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது உண்மை அல்ல என்பதை மாவட்ட செயலாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

இந்த கூட்டம் முடிந்து சரியாக ஒருவாரமே ஆன நிலையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

கடந்த கூட்டத்தில் ரஜினிகாந்த், ‘கட்சி பொறுப்பு தன்னிடமும், ஆட்சி பொறுப்பு நல்லவர் ஒருவர் கையில் ஒப்படைக்கப்படும் என்று கூறியதற்கு அவருடைய மன்ற மாவட்ட செயலாளர்கள் ஏற்க மறுத்து, அதிருப்தி தெரிவித்தனர்.

இந்தநிலையில் ‘தான் ஏன் அப்படிப்பட்ட முடிவு எடுத்தேன்? என்பது குறித்து ரஜினிகாந்த் இன்று நடைபெறும் கூட்டத்தில் விளக்கம் அளிக்க உள்ளார். தனது முடிவில் உள்ள நியாயமான அம்சங்களை எடுத்துக்கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டம் முடிந்தவுடன் ரஜினிகாந்த் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் காலை 10.30 மணிக்கு நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். அப்போது அவர் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சியை இன்னும் அறிவிக்காவிட்டாலும், தொடங்காவிட்டாலும் அதற்குரிய பணிகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது. அனைத்து பணிகளையும் அவர் திட்டமிட்டு தீவிரமாக செயல்படுத்தி வருகிறார்.

தற்போது அவருடைய 168-வது படமான ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2 மாதங்களில் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தான் அவர் கட்சி பெயரை வெளியிடுவார் என்று தெரிகிறது.

அதன்பின்னர் அவர் மிக தீவிரமாக அரசியல் களத்தில் குதித்துவிடுவார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவருடைய கட்சியில் பதவிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகளில் கட்சி பொறுப்பு, பல்வேறு அணிகளின் பொறுப்பு ஆகியவைகளுக்கு கிளை தலைவர்கள், செயலாளர்கள் தொடங்கி கட்சி தலைமை வரை ஏறத்தாழ 50 ஆயிரம் பதவிகள் இருக்கிறது. ஆனால் ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சியில் மற்ற கட்சிகளை விட 10-ல் ஒரு பங்கு அதாவது, ஏறத்தாழ 5 ஆயிரம் பதவிகளே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அனுபவமிக்க வயது முதிர்ந்தவர்கள் ஆட்சி பணியில் ஒரு சிலர் இருப்பார்கள், 48 வயதுக்கு குறைந்தவர்கள் பலர் முக்கிய பொறுப்புகளில் இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில், ‘மாவட்ட செயலாளர்களிடம் கூறியது போல கட்சியில் இருந்தும் பொறுப்புகளுக்கு வருவார்கள். கட்சிக்கு வெளியே மற்ற கட்சிகளிலோ அல்லது கட்சிகளே வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் நல்லவர்களோ, நிச்சயமாக ஆட்சி பொறுப்புக்கு வருவார்கள்’ என்ற வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆக ரஜினிகாந்த் கட்சி தொடங்கிவிட்டால் பிற கட்சிகளில் எந்தவித புகார்களுக்கு இடமில்லாமல் பணியாற்றியவர்களும், அரசியலிலேயே இதுவரை நுழையாமல் பல்வேறு துறைகளில் பிரகாசித்து வரும் ஆன்றோர்களுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்பு வழங்க ரஜினிகாந்த் முடிவு எடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

கட்சி அறிவிப்பை வெளியிட்டவுடன் மிகப்பெரிய மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும், அந்த மாநாட்டை சென்னையில் நடத்தலாமா? அல்லது வேறு மாவட்டத்தில் நடத்தலாமா? என்பது தொடர்பாகவும் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ”கணவரின் உறுப்புகளை தானம் செய்ய வற்புத்தப்பட்டாரா மனைவி?”

மருத்துவர்கள்படத்தின் காப்புரிமைGPOINTSTUDIO/GETTY IMAGES

கணவரின் உறுப்புகளை தானம் செய்யக்கோரி வற்புறுத்துவதாக மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் புகார் அளித்தார் 34 வயதுடைய பெண் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

மதுரை மாவட்டம் திருப்பாலையைச் சேர்ந்த நித்யா தன் கணவர் வீரப்பாண்டியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சரி செய்ய 2 வாரங்கள் ஆகும் எனவும் சிகிச்சைக்கு 5 லட்சம் செலவாகும் எனவும் கூறியுள்ளனர் என அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுவரை 97 லட்சம் செலவு செய்த்தாகவும் இன்னும் அவருடைய கணவர் குணமடையவில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். மேலும் விரைவில் அவர் மூளைச் சாவு ஏற்பட உள்ளதாகவும் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் வற்புறுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார் நித்யா.

Presentational grey line

இந்து தமிழ் திசை: “மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் அரசிதழில் வெளியீடு”

2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது.

நம் நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும். கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அடுத்து 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக் கெடுப்பு நடைபெறும். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் (கெஜட்) வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, முதல்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப் டம்பர் 30-ம் தேதி வரை நடை பெறுகிறது.

வீடுகளை கணக்கெடுக்கும் போது 31 வகையான கேள்விகள் கேட்கப்படும் என அதில் குறிப் பிடப்பட்டுள்ளது.

கட்டிட எண், வீட்டு எண், வீட்டின் உறுதித்தன்மை, வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை, வீட்டு தலைவரின் பெயர், வீட்டு தலைவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவரா, சொந்த வீடா, குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிப்பிட வசதி, வீட்டில் கணினி, லேப்டாப் உள்ளதா, இரு சக்கர வாகனம் மற்றும் கார் இருக்கிறதா என்பன உள்ளிட்ட 31 கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. முதல்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Presentational grey line

தினமணி: “கோவையில் தொடரும் அசாதாரண சூழல்:அதிகாரிகளுடன் டிஜிபி நேரில் ஆலோசனை”

"கோவையில் தொடரும் அசாதாரண சூழல்:அதிகாரிகளுடன் டிஜிபி நேரில் ஆலோசனை"படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கோவை மாநகரில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபி திரிபாதி கோவைக்கு புதன்கிழமை நேரில் வந்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா் என்கிறது தினமணி நாளிதழ்

இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் ஆனந்த் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை, நஞ்சுண்டாபுரம் பகுதியில் மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து கோவை, கணபதி அருகேயுள்ள பள்ளிவாசல் மற்றும் இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலா் இக்பால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேற்கண்ட சம்பவங்கள் தொடா்பாக மாநகரில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடா்ந்து, மாநகரப் பகுதிகளில் காவல் துறையினா் தங்களது கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனா். இரவு நேரத்தில் மாநகரம் முழுவதும் போலீஸாா் தொடா் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி திங்கள்கிழமை இரவு கோவைக்கு வந்தாா். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், இரவு முழுவதும் மாநகரில் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து டிஜிபி திரிபாதி கோவைக்கு புதன்கிழமை வந்தாா். மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு வந்த அவா், அங்கு காவல் துறை உயா் அதிகாரிகளுடன் மாநகரின் சட்டம், ஒழுங்கு தொடா்பாக ஆலோசனை நடத்தினாா். இதில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, மேற்கு மண்டல ஐஜி கு.பெரியய்யா, மாநகர காவல் ஆணையா் சுமித் சரண், துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் சுமாா் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக வெற்றிச்செல்வன் பணியாற்றி வந்தாா். மாநகரில் தொடா்ந்து நடைபெறும் அசாதாரண சம்பவங்களுக்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம் என பல தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் உதவி ஆணையா் வெற்றிச்செல்வன் திடீரென புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டாா்.

அவருக்குப் பதில் மாநகர மத்திய உட்கோட்ட குற்றப் பிரிவு உதவி ஆணையா் சந்திரசேகா், மாநகர சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அலுவலகத்துக்கு உடனடியாக வந்த அவா் பொறுப்பேற்றுக் கொண்டு பணிகளைத் தொடங்கினாா்.

– இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

Back to top button