செய்திகள்

அமெரிக்காவில் மற்றுமொரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை : மீண்டும் வெடித்தது போராட்டம்

அமெரிக்காவில் மற்றுமொரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை அமெரிக்க பொலிஸார் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள நிலையில் அதற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் இடம்பெற்றது மாத்திரமல்லது உலக நாடெங்கிலும் போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில், மற்றொரு கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்  இதனை கண்டித்து போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு 27 வயதுடைய ரேஷர்ட் புரூக்ஸ் என்ற கறுப்பின இளைஞர், நேற்று முன்தினம் (ஜூன் 12) இரவு காரில் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளார்.

இவ்வாறு உணவகத்திற்கு முன்னால் இருந்ததால் வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு சாப்பிட வர முடியவில்லை என்று உணவக ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார்  சம்பவ இடத்திற்கு வந்து, அந்த கறுப்பின இளைஞர் மது அருந்தியுள்ளாரா என சோதனை செய்ய முயன்றனர்.

அதற்கு ஒத்துழைப்பு அளிக்க புரூக்ஸ் மறுத்துவிட்டார். மேலும், கைதுசெய்ய முற்படும் போது, பொலிலிசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு ஓட முயன்றார்.

அவரை பொலிஸார் பின் தொடர்ந்த போது, புரூக்ஸ் துப்பாக்கியால் சுட முயன்றார். இதனையடுத்து, பொலிஸார் சுட்டதில் புரூக்ஸ் பலத்த காயமடைந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த புரூக்ஸை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதன் போது பொலிஸாரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அட்லாண்டா நகர பொலிஸ் நிலைய தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

சம்பவத்தைக் கண்டித்து  அட்லாண்டா நகரில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. பல இடங்களில் வீதிகளை மறித்து போராட்டம் நடந்து வருகிறது. மின்னபொலிஸ் நகரில், ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர், பொலிசார் அத்துமீறலில் உயிரிழந்ததில், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ஆரம்பித்த போராட்டம், உலகத்தின் பல நாடுகளிலும் போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button