செய்திகள்

கொரோனாவால் வந்த விபரீதம் ; அனுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி; நால்வர் காயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில்  முன்னெடுக்கப்பட்ட போராட்டம்  மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  கைதி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் வைத்தியர்  துலான் சமரவீர தெரிவித்தார்.

சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், குழப்பமாக மாறியுள்ளதாகவும் இதன்போது தப்பியோட முற்பட்டவர்கள் மீது சிறைக் காவலர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நாடளாவிய ரீதியில் பரவி வரும் நிலையில், இன்று புதிதாக சில விளக்கமறியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதன்போது புதிய கைதிகளை கொரோனா அச்சம் காரணமாக  அங்கு அனுமதிக்கக் கூடாது என கைதிகள் போராட்டம் செய்துள்ளனர்.

இந்த போராட்டத்தை சிறைக் காவலர்கள் கட்டுப்படுத்த முற்பட்ட போது, சில கைதிகள் தப்பியோட முயன்றுள்ளதாகவும் அதன்போதே சிறைக் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

இந்த குழப்ப நிலையில் இடையே சில கைதிகள் போராட சிறையின் கூரைக்கு ஏறியுள்ளதுடன் சிறைச்சாலைக்குள் சிறிய தீ பரவலும்  ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் துப்பாக்கிச் சூட்டை அடுத்து சிறையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன், அச்சந்தர்ப்பத்தில்  கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க  மேலதிக பொலிஸ் படையும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையும் அங்கு அழைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் உறுதி செய்தனர்.

Back to top button