ஆன்மிகம்

மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு 2023 எப்படி? – புத்தாண்டு பலன்கள்

மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்): 

எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும்போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடிகள் நீங்கள் தான். கவரிமானைப் போல கவுரவம் பார்க்கும் உங்களை பணத்தை காட்டி விலைக்கு வாங்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். இதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். விஐபிகளின் நட்பு கிடைக்கும்.

மனஸ்தாபங்களால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். வர வேண்டிய பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாய்வழி சொத்துகளை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்பு கூடும். வருட ஆரம்பம் முதல் 23.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச்செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். திருமணம், சீமந்தம் போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வெளிநாடு செல்வீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நல்ல வரன் அமையும். மகளின் கூடா நட்பு விலகும். லேசான தலை சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். உறவினர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.

குருபகவான் 24.4.2023 முதல், வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்கிறார். எனவே மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டு வலி, சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும்போதும், சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கடன் தொந்தரவுகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தவறான போக்கை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்சினை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகுத் தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்து செல்லும். வாகனத்தை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். 1.11.2023 முதல், வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்து செல்லும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜென்மச் சனி தொடர்வதால் பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். கணவன் – மனைவிக்குள் சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். பெரிதாக்க வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெரிய பதவியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கி பேச வேண்டாம். 17.1.2023 முதல் சனிபகவான் 2-ம் வீடான கும்ப ராசியில் சென்று பாதச்சனியாக அமர்வதால் இக்காலகட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும். பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகூடமாக பேசுவார்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உத்தியோகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேலைச்சுமை வாட்டும். மையப்பகுதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை மதிப்பார். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

இந்த 2023-ம் ஆண்டு உங்களை விஸ்வரூபமெடுக்க வைப்பதுடன், திடீர் யோகங்களையும், வெற்றியையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்: உளுந்தூர் பேட்டைக்கு அருகில் பரிக்கல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்குங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசியினருக்கு 2023 எப்படி? – புத்தாண்டு பலன்கள்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்): 

தங்கத்தின் தரம் கூட குறையலாம் ஆனால் உங்கள் நடத்தையின் தரம் என்றும் குறையாது. குடிசை வீட்டில் பிறந்தாலும் விண்ணை முட்டும் உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள் தான். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். சூரியனும், புதனும் சாதகமாக லாப வீட்டில் அமர்ந்திருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால் சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். குழைந்து பேசி குதர்க்கமானவர்களையும் சரி செய்வீர்கள். சொந்த பந்தங்கள் இணைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் பணம் வரும். அரசியலில் செல்வாக்கு கூடும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகளும் நல்ல விதத்தில் முடியும்.

குருபகவான் 23.4.2023 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வாரிசு இல்லையே என வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். புதுவீடு கட்டி குடி புகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரும் புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் ஆதாயம் உண்டு. மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

ஆனால் குருபகவான் 24.4.2023 முதல் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை தாமதமாக முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வசதி, செல்வாக்கைக் கண்டு தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம். 31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு மருத்துவச் செலவுகளும், அவருடன் வீண் விவாதங்களும் வந்து போகும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். ஆனால் 3-ம் வீட்டில் ராகு இருப்பதால் துணிச்சல் பிறக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். சொத்து சேரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

1.11.2023 முதல், வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறு சிறு விபத்துகளும் வந்து போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் விரயச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். 17.01.2023 முதல் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்வதால் இக்காலகட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும்.

வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். என்றாலும் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். கடன் தர வேண்டாம். அரிசி, பூ, எலக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். உத்தியோகஸ்தர்களே! ஏப்ரல் மாதம் வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் மரியாதை கூடும். ஆனால் மே மாதம் முதல் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். பதவி உயர்வு, சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களால் மன உளைச்சல் ஏற்படும். இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும், மையப் பகுதியிலிருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் அருகிலுள்ள மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தரையும், முருகப் பெருமானையும் வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவுங்கள். அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.

கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு 2023 எப்படி? – புத்தாண்டு பலன்கள்

மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி): 

பழமையான வேர்கள் பலமாக இருந்தால்தான் புதிய இலைகளும், பூக்களும், காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்துக்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள். உங்களுக்கு லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த பனிபோர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும்.

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. தடைபட்ட திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி ஏற்பாடாகும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக வலம் வருவீர்கள். வருடம் பிறக்கும் போதிலிருந்து 23.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசியில் ஜென்ம குருவாக நீடிப்பதால் அடுக்கடுக்காக வேலை இருந்து கொண்டேயிருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். நகையை வங்கிப் பெட்டகத்தில் வைத்து பாதுகாப்பது நல்லது. அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம்.

உங்கள் ராசிநாதனான குருபகவான் 24.4.2023 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ம் வீட்டில் அமர்வதால் சோர்வு, களைப்பு நீங்கும். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கி அமைதி திரும்பும். ஈகோ பிரச்சினையால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். தள்ளிப் போன திருமணம், சீமந்தம் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைத்து புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். அநாவசிய செலவுகள் இனி குறையும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். எதிர்த்துப் பேசியவர்கள் அடங்குவார்கள்.

31.10.2023 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரயம் வந்து செல்லும். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். 1.11.2023 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றை தலைவலி, செரிமானக் கோளாறு வந்து செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். கணவன் மனைவிக்குள் வரும் சின்னச் சின்ன பிரச்சினைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள்.

வருட தொடக்கத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். பொது விழாக்கள், திருமணம், கிரகப் பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள் இப்பொழுது உங்களுக்கு உதவ முன்வருவார்கள். 17.1.2023 முதல் சனிபகவான் 12-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலகட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்சினை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லும். வாகனத்தில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை.

வியாபாரிகளே! மே மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளையும் விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணு முணுப்பார்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி, கட்டுமானப் பணி, பவர் புராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஏப்ரல் மாதம் வரை கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையேயென புலம்புவீர்கள். மே மாதம் முதல் மரியாதை கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளையும் ஒப்படைப் பார்கள். பதவி உயர்வுக்காக சில தேர்வுகளை எழுத திட்டமிடுவீர்கள்.

எவ்வளவோ முயன்றும் முன்னுக்கு வராமல் முனகிக் கொண்டிருந்த உங்களை இந்த 2023-ம் ஆண்டு வெற்றி பெற வைப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றும்படி அமையும்.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் தில்லைக் காளியம்மனை உங்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று குங்கும அர்ச்சனை செய்து வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு 2023 எப்படி? – புத்தாண்டு பலன்கள்

Back to top button