செய்திகள்

அதிக விலையில் நுகர்வுப் பொருட்கள் விற்பனையாவதாக மக்கள் குற்றச்சாட்டு

ஊரடங்கு சட்ட காலத்தில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்ற நிலையில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் பொலிசார் இணைந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். மக்கள் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்கின்ற இந்த நேரத்தில் வியாபாரிகள் மக்களை வதைக்கும் விதத்தில் செயற்பட வேண்டாம் எனவும் நுகர்வோர் அதிகார சபை வலியுறுத்துகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை அடுத்து அரசாங்கம் விதித்துள்ள ஊரடங்கு சட்ட காலத்தினுள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ள போதிலும் நாட்டில் பல இடங்களில் அதிக விலையில் நுகர்வுப்பொருட்கள் விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மேல்மாகாணத்தில் தற்காலிகமாக திறக்கப்பட்ட மெனிங் பொதுச் சந்தையில் அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் கொழும்பில் பல்வேறு இடங்களில் அதிக விலையில் நுகர்வுப்பொருட்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கூறுகையில்:- மேல் மாகணத்தில் குறிப்பாக மெனிங் பொது வியாபார சந்தையில் அதிக விலைக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை விற்றதாக சிலர் மீது புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிகர்வோர் அதிகார சபை மற்றும் பொலிசாரின் தலையீட்டில் விலை நிர்ணய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிசார் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதேபோல் அதிக விலையில் பொருட்களை விற்ற மூன்று வியாபாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றதா என கண்காணித்து வருகின்றோம். நாட்டில் சகல பகுதிகளிலும் இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால் அது குறித்து 119 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு முறையிட முடியும் என்றார்.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம்  இது குறித்து வினவியபோது அவர்கள் தெரிவிக்கையில்:- நாட்டின் சாதாராண நிலைமைகள் போல் அல்லாது நாடு முழுவதும் நெருக்கடியில் உள்ள சூழலில் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் விதத்தில் ஒரு சில வியாபாரிகள் செயற்படுவது மோசமான செயற்பாடாகும். அதிக விலையில் சில அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதாக சகல பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. ஆகவே நாடு பூராகவும் பிரதான வர்த்தக மையங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அதுவரையில் மக்களுக்கான நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்குமாறு அறிவுறுத்தி வருவதாக தெரிவித்தனர்.

எவ்வாறு இருப்பினும் ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படும் குறுகிய கால எல்லைக்குள் மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதாகவும், அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறிய வகையில் வியாபாரிகள் செயற்ப்பட்டு வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button