செய்திகள்
டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்கள்
[Source] : BBC Tamil
SPL
குறுங்கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு , பூமியில் விழுந்தபோது டையனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு டக்கோட்டா மாகாணத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியை தாக்கிய குறுங்கோளால் அழிவுற்ற மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிமங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, குறுங்கோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்த விவரங்கள் பிஎன்ஏஎஸ் என்னும் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
ROBERT DEPALMA
வடக்கு டக்கோட்டா மாகாணத்திலுள்ள டேனிஸ் என்ற பகுதியில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குறுங்கோள் தாக்கிய பின்னர் சுமார் சில நிமிடங்கள் முதல் ஒருசில மணிநேரங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த புரிதல்களை இந்த புதைபடிமங்கள் வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 12 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்த குறுங்கோள் தற்போதைய மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் விழுந்தபோது சிதறிய பாறைகள் வானத்தை நோக்கி அனைத்து திசைகளிலும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு விழுந்தன.
அப்போது, மீண்டும் பூமியின் நிலப்பரப்பில் வந்து விழுந்த பாகங்கள் டேனிஸ் பகுதியில் ஏற்படுத்திய சேதங்களை முதலாக கொண்டே இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது இந்த கண்டுபிடிப்புக்கு வழிகோலியுள்ள மீன்களின் செவுள்களின் பூமியில் விழுந்த குப்பைகளில் ஒட்டி இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், அப்போது அந்த பகுதியில் இருந்த மரப் பிசின்களில் பூமியின் மீது மோதிய குறுங்கோளின் துகள்கள் ஒட்டியுள்ளன.
ROBERT DEPALMA
அதுமட்டுமின்றி, அங்கு கிடைத்துள்ள துகள்களின் காலத்தை, மெக்ஸிகோவின் கடல் பரப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய தாக்கத்தோடு தொடர்புடைய காலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ள 65.76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான், உலகம் முழுவதும் இதையொத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
டேனிஸ் பகுதியில் கிடைக்கப்பட்டுள்ள புதைபடிமங்களை பார்க்கும்போது, குறுங்கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்த பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதில் மிகவும் ஆச்சர்யப்படத்தக்க விடயம் என்னவென்றால், முதலில் மெக்ஸிகோ வளைகுடா பகுதியை தாக்கிய இந்த குறுங்கோளால் அங்கு ஏற்பட்ட சுனாமியால் உருவான அலைகள், பல மணிநேரங்கள் சுமார் 3,000 கிலோ மீட்டர்கள் பயணித்து வடக்கு டக்கோட்டாவை அடைந்திருக்க வேண்டும்.
இருப்பினும், மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் குறுங்கோள் விழுந்தபோது அதை மையமாக கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 அளவுள்ள நிலநடுக்கத்தினால், டேனிஷ் உள்ளிட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
“நீரின் இடப்பெயர்வின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடித்து செல்லப்பட்டன” என்று கூறுகிறார் இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள டீபால்மா.
ROBERT DEPALMA
“குறுங்கோள் தாக்கிய இடத்திலிருந்து புதைபடிமங்கள் கிடைத்துள்ள இடத்தை சுனாமி அலைகள் அடைவதற்கு குறைந்தது 17 மணிநேரங்கள் ஆகியிருக்கும். ஆனால், அதிர்வு அலைகள் மற்றும் தொடர் எழுச்சிகள் (புயலாலோ, நில நடுக்கத்தாலோ நீர் நிலையில் திடீர் என்று ஏற்படும் அசைவு) சம்பவ இடத்தை அடைவதற்கு பத்து நிமிடங்களே எடுத்துக்கொண்டிருக்கக் கூடும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
வரும் திங்கட்கிழமை அன்று, பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்படவுள்ள பிஎன்ஏஎஸ் சஞ்சிகையின் பதிப்பில் இடம்பெற்றுள்ள இந்த இதுகுறித்த கட்டுரையை டையனோசர்களின் அழிவை குறிக்கும் வரலாற்றை ஆவணப்படுவதில் பெரும் பங்காற்றிய லூயிஸ் அல்வாரெசின் மகனும், கலிஃபோர்னியாவை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளருமான வால்டர் அல்வாரெஸ் ஆகியோரும் அடக்கம்.