செய்திகள்

‘வேற்று கிரக வாசிகள்’ – விவரிக்க முடியாத நிகழ்வுகளின் காணொளிகளை வெளியிட்ட அமெரிக்கா

வேற்று கிரக வாசிகள்படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE, US NAVY

”விவரிக்க முடியாத வானியல் நிகழ்வு” (unexplained aerial phenomena) என்று கூறும் மூன்று நிகழ்வுகளின் காணொளியை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது.

இணையத்தில் பகிரப்பட்டு வரும் இந்த காணொளிகளின் உண்மைத் தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதால் அந்த சந்தேகத்தை நீக்கும் வகையில் இந்த காணொளிகள் வெளியிடப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்த காணொளிகள் 2007 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இணையத்தில் கசிந்தன.

இவற்றில் இரண்டு காணொளிகளை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இணையத்தில் வெளியிட்டது.

ஒரு காணொளியை பிலின்க்-182 எனும் அமைப்பு இணையத்தில் கசிய விட்டது.

இந்த காணொளிகள் இணையத்தில் வெளியான பின்பு அவை வேற்று கிரகங்களுடன் தொடர்புடைய பொருட்கள் (Unidentified Foreign Objects – UFO) இருக்கும் காணொளிகள் என்று பலரும் கூறினார்கள்.

அந்த காணொளிகளில் என்ன உள்ளது?

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட காணொளி 2004ல் எடுக்கப்பட்டது. அந்தக் காணொளியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்களின் விமானிகளால் எடுக்கப்பட்டது.

அந்தக் காணொளியில், பசிஃபிக் பெருங்கடலின் நீர் பரப்புக்கு மேல் சுமார் 100 மைல் தூரத்துக்கு ஒரு வட்ட வடிவம் உள்ள பொருள் பறந்து செல்வதைக் காண முடிகிறது.

மற்ற இரண்டு காணொளிகளும் 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்டன.

அவற்றில் இன்னதென அறியப்படாத பொருட்கள் காற்றில் பறந்து செல்வதை காணமுடிகிறது.

'வேற்று கிரக வாசிகள்படத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE, US NAVY

அவற்றில் ஒன்று சுழன்று கொண்டே பறந்து சென்றது. “அதைப் பாருங்கள். அது சுழன்று செல்கிறது,” என்று விமானி ஒருவர் கூறுவதையும் அந்த காணொளியில் கேட்க முடிகிறது.

இந்த காணொளிகளை வெளியிடுவதன் மூலம் தங்களுடைய கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த முக்கியமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் தங்கள் வான்பரப்பில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளுக்கு எந்த இடையூறும் இருக்கப் போவதில்லை என்றும் செய்திக்குறிப்பு ஒன்றில் அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

வேற்று கிரக வாசிகள்

UFO எனப்படும் வானில் தென்படும் பொருட்கள் பெரும்பாலும் வேற்று கிரகங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு வருகின்றன.

1947 ஆம் ஆண்டு அமெரிக்க மாநிலமான நியூ மெக்சிகோவில் ரோஸ்வெல் எனும் இடத்தில் உள்ள விவசாயி ஒருவர், முதலில் பறக்கும் தட்டுகள் என்று கூறப்பட்ட கருவிகளின் சிதிலமடைந்த பாகங்களை கண்டுபிடித்தார்.

அப்போதுதான் வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் பொருட்கள் குறித்த விவாதமும் தொடங்கியது.

பின்னர் அது சோவியத் ஒன்றியத்தை கண்காணிப்பதற்கான அமெரிக்காவின் ரகசிய திட்டம் ஒன்றின் சிதிலமடைந்து பாகம் என்பது கண்டறியப்பட்டது.

நெவாடா மாகாணத்தில் ஏரியா 51 என்று அழைக்கப்பட்ட பகுதியில் வேற்றுக்கிரகவாசிகள் மட்டும் வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் பொருட்கள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக அப்போது சதித்திட்ட கோட்பாட்டாளர்கள் கூறினர்.

அதற்குக் காரணம் அங்கு நவீன ரக விமானங்கள் குறித்த ஆய்வு தளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்ததுதான்.

ஆண்டுகள் ஆக ஆக வேற்றுக் கிரகங்களிலிருந்து வரும் பொருட்கள் மட்டும் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து கூறப்பட்ட பல்வேறு தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று நிரூபணம் செய்யப்பட்டன.

எனினும், வேற்று கிரகங்களில் இருந்து வருவதாக கூறப்படும் பொருட்கள் குறித்து தாங்கள் இதற்கு முன்பு ஆய்வு செய்வதற்கு ஒரு நீண்டகாலத் திட்டம் இயங்கி வந்தது என்றும் அது தற்போது இயங்கவில்லை என்றும் 2017ஆம் ஆண்டு பென்டகன் தெரிவித்தது.

Back to top button