செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புதிய தகவல்களை வெளியிட்டார் பாதுகாப்பு செயலாளர்.
இலங்கையில் தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்த தகவல்கள் 2014ம் ஆண்டிலேயே புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருந்து என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினர் முன்னிலையில் இன்று கருத்து தெரிவிக்கையில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டேஹொட இதனை தெரிவித்துள்ளார்
உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை தடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் அமைப்பு குறித்து முன்னரே தகவல்கள் கிடைத்த போதிலும்,அந்த அமைப்பை தடைசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.அந்த அமைப்பினை தடை செய்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமானதாக மாறுவதை கட்டுப்படுத்தியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2014 ம் ஆண்டிலேயே புலனாய்வு அமைப்புகளிற்கு இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் கிடைத்திருந்தன,அவர்கள் உரிய தரப்பினரிற்கு இது குறித்து தெரியப்படுத்தினர் என நான் நினைக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதிகாரிகள் உரிய தருணத்தில் நடவடிக்கைகளை எடுத்தார்களா என்பது தெரியவில்லை இதற்கு எனக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளராகயிருந்தவரே பதில் அளிக்கவேண்டும் அவரிற்கு சில விடயங்கள் தெரிந்திருக்கலாம் என சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார்.
புலனாய்வு துறையை சேர்ந்த ஓரிரு அதிகாரிகளை கைதுசெய்வதால் முழு புலனாய்வு அமைப்பும் பலவீனமடைந்து விடாது எனவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.