செய்திகள்

கொரோனாவைக் கொள்ளுமா சூரிய கிரகணம், சூரிய கிரகணம் – கொரோனா வைரஸ்: தொடர்பு படுத்தப்படுவது ஏன்?

சூரிய கிரகணம் – கொரோனா வைரஸ்: தொடர்பு படுத்தப்படுவது ஏன்?

கொரோனா கிருமியின் தன்மையை மாற்றமடைய செய்யும் கங்கண சூரிய கிரகணம் நிகழப்போவதாக, இந்திய செய்தி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரவி வருகிறது.

கொரோனா காலத்தில் ஏற்படும் இந்த வருடாந்திர சூரிய கிரகணம் குறித்த சந்தேகங்களுக்கு, பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்தார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள்.

கே: சூரிய கிரகணத்தால் கொரோனா வைரஸ் தன்மை மாறுமா?

ப: கிரகணத்தின் போது, நோய் தொற்று உண்டாக்கக்கூடிய கொரோனா கிருமிகளில் எவ்விதமான மாற்றமும் நிகழாது. எனவே, கிரகணம் நடைபெறும் போது அதிகளவில் நோய் தொற்று தாக்கும் என்று உலா வரும் செய்திகள் முற்றிலும் அறிவியல்பூர்வமற்றவை என்பதை நாங்கள் இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

கே: கொரோனாவுக்கும், கிரகணத்திற்கும் வேறேதும் தொடர்புகள் உண்டா?

ப: சூரியனுடைய ஒளி மகுடத்தை ஆங்கிலத்தில் கொரோனா என்று சொல்வார்கள். இந்த கங்கண சூரிய கிரகணம் ஏற்படும் போது கொரோனா என்று அழைக்கப்படும் சூரியனுடைய ஒளி மகுடம் நம் கண்களுக்கு புலப்படாது. கொரோனா நுண்கிருமியின் மகுடமும் சூரியனின் ஒளி மகுடமும் உருவ ஒற்றுமை கொண்டவை என்பதை தவிர வேறு எவ்வித ஒற்றுமையும் கிடையாது.

கே: கிருமிகள் குறித்து செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சிகள் என்னென்ன?

ப: கிரகணத்தின் போது உணவில் கிருமிகள் ஏதாவது வந்து பாதிக்கிறதா? ஒளி மங்கும் சமயத்தில் கிருமி தொற்று நேரிடுகிறதா என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அதன் முடிவில் கிரகணத்தின் போது கிருமி தொற்று ஏற்படும் என்றோ, அது குறையும் என்றோ அறிவியல்பூர்வ ஆதாரமாக அவர்களால் காட்ட முடியவில்லை.

கே: கிரகணம் ஏற்படும்போது உணவு உண்ணலாமா?

ப: அந்த நேரத்தில் உணவு அருந்துவதால் பாதிப்பு என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை.

கே: சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் ஏன் பார்க்கக் கூடாது?

ப: சூரியனை கிரகணத்தின்போது மட்டுமல்ல, எப்போதுமே நேரடியாக கூர்ந்து பார்த்தால் கண்ணின் விழித்திரை பாதிப்படையும். கிரகண சமயத்தில் சூரியன் 99 விழுக்காடு மறைந்திருந்தால்கூட அதை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கண் பார்வை இழப்பு கூட சில தருணங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.

கே: தமிழகத்தில் எங்கெல்லாம் பார்க்கலாம்? அதிகபட்சமாக எங்கே தெரியும்?

ப: தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில் காலை 10.22 மணிக்கு ஆரம்பித்து, அதிகபட்ச கிரகணம் 11.58க்கு நடைபெறவுள்ளது. அதன்பிறகு, மதியம் 1.40க்கு கிரகணம் முழுமையாக முடிந்துவிடும். தமிழகத்தில் இது பகுதி அளவு சூரிய கிரகணம் மட்டுமே. தமிழகத்தில் 34 விழுக்காடு மட்டுமே சந்திரன் சூரியனை மறைக்கும் என்பதால் வடமாநிலங்களைப் போல வளைவு சூரிய கிரகணம் தெரியாது.

அந்த சூரிய கிரகணம் சௌதி அரேபியா நாட்டில், இந்தியாவின் ராஜஸ்தான் பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் சிறப்பாக தெரியும். அதைத்தொடர்ந்து சீனாவிலும் இந்த கங்கண சூரிய கிரகணத்தை காண முடியும். இந்த ஆண்டு ஏற்படக்கூடிய இந்த கிரகணம் சில நொடிகள் மட்டுமே நிகழ கூடியதாக இருக்கும்.

கே: இச்சமயங்களில் என்னென்ன ஆராய்ச்சிகள் நடத்தப்படும்?

ப: கிரகணம் நிகழ்கிற போது சூரியனுக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட தொலைவு, சூரியனுடைய விட்டம், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தொலைவு இவற்றையெல்லாம் தொடர்ந்து ஆய்வுகள் செய்து, துல்லியமான கணக்கீடுகளை மேற்கொள்வார்கள். இது போல பல ஆண்டுகளாக திரட்டப்படும் தரவுகளை ஒப்பீடு செய்து, சந்திரன் நம்மை விட்டு மெல்ல நகர்கிறது என சொல்கிறோமே அந்த கோட்பாடு பற்றிய உண்மைகளை அறியலாம். அதேபோல் சூரியனின் விட்டத்தில் ஏதேனும் மாறுபாடு இருக்கிறதா என்பது போன்ற பல ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

Back to top button