ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி : தனுசு ராசிக்காரர்களே… ஜென்ம சனி முடிந்து குடும்ப சனி ஆரம்பமாம்!

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. சனி பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து 4ஆம் வீடு, 8ஆம் வீடு 11ஆம் வீடுகளை பார்க்கிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி என்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து போங்க.
ஜென்ம சனி இனி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும். சனி பகவான் சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பாத சனி ஆரம்பம்
ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. பாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும். பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும்.
கவலை வேண்டாம்
குடும்பசனி குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும்.சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
பிரச்சினைகள் வரும்
பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா. அதுவும் சரிதான் ஆனா. இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரையும் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எப்பவும் புலம்பாதீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க.
உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க.
தடைகள் நீங்கும்
இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும். இதுவரை தேவையற்ற செலவுகளையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறும்.
கணவன் மனைவி உறவு
காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும்.
புதிய வேலை கிடைக்கும்
வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். 2ம் இடம் சனி என்பதால் எப்பொழுதும் பற்றாக்குறையான சூழ்நிலை உலவி வரும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்ற அளவில் சனியின் தன்மை இருக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.
உயர்கல்வி யோகம்
மறதி என்பதை மறைந்து உற்சாகமாக இருக்கப் பழகுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தல் அவசியம். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்றும் போரட வேண்டி வரும். சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியின் 4ம் இடத்தை பார்ப்பதால் தடைபட்ட உயர் கல்வி தொடரும்.
பயம் கவலை நீங்கும்
அம்மாவிற்கு வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். அம்மாவின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும்.
கடன் வாங்க வேண்டாம்
சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வாங்க. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். உங்களது ஆசை, அபிலாஷைகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும். நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.
சனிப்பெயர்ச்சி : தனுசு ராசிக்காரர்களே... ஜென்ம சனி முடிந்து குடும்ப சனி ஆரம்பமாம்! 1

Back to top button