செய்திகள்

இந்தியன் 2 படிப்பிடிப்பு தளத்தில் விபத்து – 3 பேர் பலி; கமல் இரங்கல்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் – இந்தியன் 2 படிப்பிடிப்பு தளத்தில் விபத்து – 3 பேர் உயிரிழப்பு

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“நடிகர் கமல்ஹாசன் – காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2
படத்தின் காப்புரிமை TWITTER

இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி: காவிரி வேளாண் மண்டலம்: அமைச்சரவை ஒப்புதல்

காவிரி
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க தமிழக அமைச்சரவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

“இதையடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு அன்றைய தினமே நிறைவேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சட்டப் பேரவையில் இதுகுறித்து எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வேளாண் மண்டல விவகாரத்தில் சட்டப்பேரவை மூலமாக அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், இந்த விஷயத்தில் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அரசின் அறிவிப்பு அமையும் எனவும் அவா் அறிவித்தாா்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கூடியது. சுமாா் ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதில், பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டல சட்ட மசோதா தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் க.சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி ஆகியோா் பங்கேற்றனா்” என்று தினமணி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: “யாழ்பாணம் – புதுச்சேரி இடையே கப்பல் போக்குவரத்து”

கப்பல்
Image caption சித்தரிக்கும் படம்

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து புதுச்சேரிக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அந்நாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை இலங்கை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வருதை தந்தார். பின்னா் செய்தியாளா்களிடம் சந்தித்து மத்திய இலங்கை அமைச்சர் மன்சுக் மாண்டியா கூறியதாவது:-

இந்தியா – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக புதுச்சேரியிலிருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் நகருக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Back to top button