செய்திகள்

கல்வித்தகைமை குறைந்தவர்களும் வேலை விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேற ஒரு வாய்ப்பு!

ஆங்கிலப் புலமை மற்றும் கல்வித்தகைமை குறைந்த வெளிநாட்டு பணியாளர்கள் ஆஸ்திரேலியா வந்து வேலைசெய்வதற்கான விசேட வழிவகையொன்றை ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அரசு விக்டோரியா மாநிலத்தின் Great South Coast பிராந்தியத்துடன் செய்துகொள்ளவிருக்கும் 5 வருட ஒப்பந்தத்தின்படி அப்பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் hospitality துறைகளில் பணிபுரிவதற்காக விண்ணப்பிக்க முடியும்.
சாதாரணமாக skilled migration ஊடாக ஆஸ்திரேலியா வர விரும்பும் ஒருவர் ஆஸ்திரேலிய அரசு எதிர்பார்க்கும் கல்வித்தகைமை மற்றும் ஆங்கிலப்புலமை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் இவ்விசேட விசா ஏற்பாட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டு குறைந்தளவிலான கல்வித்தகைமை மற்றும் ஆங்கிலப்புலமை உள்ளவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் வழியேற்படுத்தப்படுகின்றது.
இதன்மூலம் குறைந்தளவு ஆங்கிலப்புலமை மற்றும் கல்வித் தகைமையுடைய ஒருவர் விக்டோரியா மாநிலத்தின் Great South Coast பிராந்தியத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்புக் கிடைக்கும் அதேநேரம் இதனூடாக அவர் ஆஸ்திரேலிய வதிவிட உரிமை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
குறித்த விசாவின் கீழ் Great South Coast பிராந்தியத்திலுள்ள விவசாயம் மற்றும் hospitality துறைசார் நிறுவனங்கள் மற்றும் பண்ணைகள் தமக்குத் தேவையான பணியாளர்களை வருவித்துக்கொள்ள முடியும். ஆனால் அவ்வேலைக்கு உள்ளூரிலேயே ஒருவரைக் கண்டுபிடிக்கமுடியாதுள்ளமையை குறித்த நிறுவனம் நிரூபிக்க வேண்டும்.
இதேவேளை ஆஸ்திரேலியாவின் Northern Territory-யில் இதேபோன்றதொரு 5 வருட விசேட விசா ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும் இதனூடாக வரும் பணியாளர் நிரந்தர வதிவிட உரிமை பெறுவது கடினம் என குறிப்பிடப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவின் பல பிராந்தியங்களோடு இவ்வாறான சிறப்பு விசா ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கு ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் David Coleman தெரிவித்துள்ளார்.

நன்றி : https://www.sbs.com.au
கல்வித்தகைமை குறைந்தவர்களும் வேலை விசா ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேற ஒரு வாய்ப்பு! 1

Back to top button